மன்னார் திருக்கேதீஸ்வரம் - மாந்தைச் சந்தி வளைவு தொடர்பாக அண்மையில் தீவிரமடைந்த பிரச்சினையைச் சுமூகமாக தீர்த்து வைக்கும் முயற்சியில் மன்னார் சர்வமதப் பேரவை ஈடுபட்டுள்ளது.
பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் நோக்கோடு இரண்டு தரப்பினரையும் முதலில் தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்னர் அனைத்துத் தரப்பினரையும் ஒரு இடத்திற்குக் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் தலைமையில் சர்வமதப் பேரவையின் உறுப்பினர்களுக்கும் கத்தோலிக்க தரப்பினருக்குமான முதற்கட்டச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது கத்தோலிக்க தரப்பினரின் நிலைப்பாடு, நியாயம், வாதம் போன்றவற்றை அறிந்துகொள்ளும் நோக்கத்தோடு இச்சந்திப்பு இடம்பெற்றது. முறுகல் நிலை ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கத்தோலிக்க தரப்பினர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவை தலைவர், தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான ஒரு தீர்வைக் காண்பதில் மன்னார் சர்வமதப் பேரவை அர்ப்பணிப்போடு செயற்படும் என தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் சர்வமதத் தலைவர்கள் சார்பில் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், இணைத் தலைவர்களான மௌலவி எஸ்.அஸீம், சங்.விமலதர்ம தேரர், பாதிரியார் எஸ்.பத்திநாதன், சட்டத்தரணிகளான ஜனாப் எம். எம்.சபுறுதீன், அர்ஜூன் அருமைநாயகம், மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு. விக்ரர் சோசை அடிகளார், மாந்தைப் பங்குத்தந்தை அருட்திரு. அன்ரன் மரியதாசன் லியோன் அடிகளார், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியச் செயலாளர் திரு.கெனடி மற்றும் மாந்தைப் பங்குப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment