"ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தடையாக இருப்பாராயின், அதற்கு எதிராக அறவழியில் போராட்டங்கள் வெடிக்கும்.” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சபையில் இன்று எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு "ஜெனிவா மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையையும், அறிவிப்புகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
எனவே, இம்முறை முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணைக்கு இணை அனுசரணையை வழங்கி அதை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை, அதிலிருந்து விலகி நிற்போம் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணக்கூடிய சூழல் உருவாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாது செய்து அதை ஜனாதிபதி குழப்பினார். வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீடு ஆரம்பமாகியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படவில்லை. உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படவில்லை. பொறுப்புக்கூறும் கடப்பாடும் நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு எதுவும் நடைபெறாத நிலையில், மஹிந்த ஆட்சிக்கால பாணியில், தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது. அனுசரணை வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி வரவேண்டும்.
பொறுப்புக்கூறப்பட வேண்டும், உண்மைகள் கண்டறியப்பட வேண்டும், போர்க்குற்ற விசாரணை நடந்தாக வேண்டும், ஜெனிவாத் தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
மாறாக ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாவிட்டால் ஜனநாயக வழியில் போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. முஸ்லிம் கட்சிகளையும், மலையகக் கட்சிகளையும் இணைத்துப் போராடுவோம். ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடவடிக்கை ஆரம்பமாகும்.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கையானது ஏமாற்றமளிக்கின்றது. உண்மை என்னவென்பதை கண்டறிய மீண்டும் விசாரணை நடத்தப்படவேண்டும்.
போர்த்துக்கேயர் காலத்துக்குரியவை எனக் கூறப்படுவது தவறாகும். எனவே, வேறொரு நாட்டில் விசாரணை நடத்தப்படவேண்டும்" - என்றார்.
Charles Ariyakumar Jaseeharan
Charles Ariyakumar Jaseeharan
No comments:
Post a Comment