அண்மைக் காலமாக எமது பிரதேசத்தில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளால் மாடுகள் இறப்பதை கருத்திற் கொண்டு இது தொடர்பான முழுமையான ஆய்வறிக்கையொன்றினை வழங்குமாறு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினை எமது பிரதேச சபை கோரியிருந்தது.
கோறளைப்பற்று மேற்கு பிரதேசம் உற்பட கிழக்கு மாகாணத்தில் அசாதரணமான முறையில் மாடுகள் இறப்பது பற்றி மேற்கொள்ளப்பட்ட விலங்கு மருத்துவ புலனாய்வு மற்றும் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மாட்டிறைச்சியையோ, பாலையோ உணவுக்காக பயன்படுத்துவதன் மூலம் மனித சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விலங்கு நோய்கள் எதுவும் இப்பிரதேசத்தில் ஏற்படவில்லை எனவும் மாட்டிறைச்சியை உணவுக்காக பயன்படுத்துவதில் எதுவித தடைகளும் இல்லையெனவும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளரினால் இப்பிரதேச சபைக்கு அறிக்கை தரப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, இறைச்சிப் பாவனை தொடர்பில் இன்று பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அஸ்மி தலைமையில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் நாளை 08.03.2019 வெள்ளிக்கிழமை தொடக்கம் இறைச்சிக் கடைகளின் வியாபார நடவடிக்கைகளை வழமை போல் நடைபெறுவதற்கான அறிவித்தலும் பிரதேச சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
இம்மீளாய்வுக் கூட்டத்தில் இப்பிரதேச சபையின் உறுப்பினர்கள், கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர், பிரதம முகாமைத்துவ உதவியாளர், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment