ஏறாவூர் முஹம்மது அஸ்மி
நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது மக்களை வலுவூட்டல், வறிய மக்களைப் பாதுகாத்தல், என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா ஆகிய தொனிப்பொருளில் நேற்றுமுன்தினம் (5) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது,
குறித்த வரவு செலவுத் திட்டமானது, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தியதாக அமைந்திருப்பது திருப்தியளிக்கின்றது, அத்துடன் யுத்தத்தினாலும், இயற்கை அனர்த்தங்களாலும் பின்னடைந்து போயிருக்கின்ற வடக்கு - கிழக்கு மக்களுக்கு அதிக நிவாரணத்தை வழங்கக் கூடியதாக வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு, மேம்பாட்டு வேலைத் திட்டங்களுக்காக அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது,
அத்துடன், எமது அமைச்சின் மேம்பாட்டு நடவடிக்கைளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் நிதியொதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, சமூக வலுவூட்டலுக்காகவும், சமுர்த்தியை மீளக்கட்டமைத்து பயனாளர் எண்ணிக்கையை 6 இலட்சத்தால் அதிகரிக்கவும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதே வேளை, எமது அமைச்சின் கீழான சமூக சேவைத் திணைக்களம், அங்கவீனர்களுக்கான நிதியம், முதியோர் பாதுகாப்பு உட்பட பல்வேறு செயற்பாடுகளுக்கான நிதியொதுக்கீடுகளும் கணிசமாக இடம்பெற்றுள்ளன.
2019 இற்கான வரவு செலவுத் திட்டத்திலே அரசாங்கத்தின் துண்டு விழும் தொகையானது கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் இம்முறை குறைவடைந்திருப்பதோடு, அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காகவும், மக்களது மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதானது, எமக்கு மிகுந்த திருப்தியை அளிக்கிறது என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment