ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களால் எதனையும் சாதிக்க முடியாதுள்ளது : முன்னாள் அமைச்சர் சுபையிர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 30, 2019

ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களால் எதனையும் சாதிக்க முடியாதுள்ளது : முன்னாள் அமைச்சர் சுபையிர் தெரிவிப்பு

அற்பசொற்ப சலுகைகளுக்காக சோரம் போகின்ற ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் சுமார் ஒரு கோடி ரூபா நிதியில் ஏறாவூர் அப்துல் மஜீட் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட வீதியினை திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், பதவிகளுக்காகவும், சன்மானங்களுக்காவும் சோரம் போகின்ற ஆளுமையற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களினால் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியாது. அவர்கள் சமூக நலன்கருதி எதனையும் சாதிக்கவுமில்லை. இவ்வாறான சுயநல நோக்கம்கொண்ட அரசியல் தலைவர்களுக்கு முஸ்லிம் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

குறிப்பாக பிரதேச செயலாளர்களினால் வழங்கப்படுகின்ற சலுகைகளுக்காகவும், மண் அனுமதிப்பத்திரங்களுக்காகவும் மற்றும் சிறு காணித்துண்டுகளுக்காகவும் எமது சமூகத்தின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்க முடியாது. அவ்வாறான சிறு சிறு சலுகைகளுக்காக முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுக்கின்ற அரசியல் தலைவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் காணப்படுகின்றனர்.

கேவலம் தாங்கள் பெற்றுக்கொள்கின்ற மண் அனுமதிப்பத்திரம் மற்றும் தங்களுக்கும் தங்களது ஆதரவாலர்களுக்கும் கிடைக்கின்ற காணித்துண்டுகள் உள்ளிட்ட அற்ப சொற்ப சலுகைகளினால் முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு அவர்களினால் குரலெழுப்ப முடியாதுள்ளது. அதனாலே இந்த சமூகம் எந்தவொரு தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது.

பிரதேச செயலகங்களினூடாக தீர்க்கப்பட வேண்டிய காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட எமது சமூகத்தினுடைய நிருவாக ரீதியான பிரச்சினைகளை இவ்வாறு பிரதேச செயலாளர்களிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டவர்கள் ஊடாக தீர்க்க முடியாமலுள்ளது.

அவர்கள் பிரதேச செயலாளர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்டு அவர்களுக்கு உடந்தையாகவும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் போதும், சமூகத்தினுடைய உரிமைகளை பெற்றுக்கொள்கின்ற விடயத்திலும் வாய் திறக்காமல் செயற்படுகின்றனர். இது மிகவும் கவலையான விடயமாகும். தாம் பெற்றுக்கொண்ட சலுகைகளுக்கு பகரமாகவும், அந்நிய சமூகத்தின் வாக்குகள் தமக்கு இல்லாமல் போகும் என்ற ஒரே ஒரு காரணத்தினாலுமே அவர்கள் மௌனமாக இருக்கின்றனர்.

இவ்வாறான சுயநலம்கொண்ட ஆளுமையற்ற அரசியல் தலைவர்களையே முஸ்லிம் சமூகமும் தொடர்ந்து ஆதரிக்கின்றது. முஸ்லிம் சமூகத்தினுடைய காணி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் என நிலையான அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கின்ற அரசியல்வாதிகள் இன்று அரிதாகிவிட்டனர்.

கடந்த யுத்த காலத்தின் போது விவசாயக் காணி மற்றும் தங்களது இருப்பிடங்களை இழந்த எமது முஸ்லிம் சமூகம் இன்று அவற்றை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இன்று எம்மில் எத்தனை பேருக்கு காணி உறுதிப்பத்திரம் இல்லாமலுள்ளது. எமது விவசாயக்காணிகள் திட்டமிடப்பட்டு அரச காணிகளாக்கப்படுகின்றன. அதுமாத்திரமல்ல தொடர்ச்சியாக விவசாயம் செய்யப்பட்ட முஸ்லிம்களுடைய விவசாய காணிகள் மேச்சல் தரையாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பொருளாதார ரீதியாக எத்தனையோ விடயங்களை முஸ்லிம் சமூகம் இழந்திருக்கிறது.

குறிப்பாக இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து உச்ச பதவிகை அடைந்திருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களால் முஸ்லிம் சமூகம் இழந்தவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுமில்லை. அவர்களினால் ஆர்வம் செலுத்தப்படவுமில்லை. எதனையும் அவர்கள் சமூகத்திற்காய் பெற்றுக்கொடுக்கவுமில்லை.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தி பேச விளைகின்ற போது அவற்றை எமது அரசியல் தலைவர்கள் ஏளனம் செய்து உதாசீனம் செய்கின்ற நிலைமைகளே இன்று காணப்படுகிறன்றது. இந்த செயற்பாடானது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் ஆபத்தாகும். எனவே இவ்வாறானவர்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம் மக்களுடைய ஆணையைப் பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்ற சிலர் தமக்கு வழங்கப்படுகின்ற அத்தனை வரப்பிரசாதங்களையும் அனுபவித்துதவிட்டு, தமக்கு கிடைக்கின்ற பெறுமதிமிக்க வாகனத்தினையும் விற்று பணங்களை சுருட்டிக்கொண்டு தனக்கு வசிப்பதற்கு ஒரு வீடு கூட இல்லை என மக்கள் மத்தியில் அழுது புலம்புகின்றனர்.

குறித்த சிலரின் இவ்வாறான செயற்பாடானது மக்களை ஏமாற்றி மீண்டுமொருமுறை வாக்குகளை சூறையாடி பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான நாடகமாகும். இவர்கள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் தொடர்பில் சிந்திக்கின்ற ஆளுமைமிக்க அரசியல் தலைவர்களை இணங்கன்டு, அவர்களுடைய கரங்களை பலப்படுத்துவது முஸ்லிம் சமூகத்தின் தார்மீக கடமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment