துபாயில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்து வந்துள்ள இலங்கையர்கள் மூவர் நேற்று சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் 50, 40 மற்றும் 18 வயதினைக் கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் மூவரும் நேற்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு சார்ஜா நகரிலிருந்து வந்த அரேபிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ 9501இலக்க விமானத்திலேயே கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக அவர் தெரிவித்தார்.
அவர்கள் முறையிலன்றி மாற்றுப் பாதையில் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டுள்ளனர். அச்சமயம் அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளை பரிசோதித்தபோது ‘டொப் மவுன்டன்’ வகை 38,94,000 ரூபா பெறுமதியுடைய 70,800 சிகரட்டுக்கள் அடங்கிய 354 சிகரட் பெட்டிகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பணிப்பாளர் எம்.ஏ. கருணாரத்னவின் வழிகாட்டலில் சுங்க அதிகாரிகள் மேற்படி நபர்களை கைது செய்துள்ளனர் என்றும் சுங்கப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment