ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும், கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான எச்.எம்.எம்.றியாழ் தான் இது காலவரை வகித்து வந்த அமைப்பாளர் பதிவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக திடீர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட இவர், கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசனமொன்றைப் பெற்றுக்கொள்ளவும் பங்களிப்பை வழங்கி இருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனாலும், தான் பிறந்த மண்ணின் மீது அன்பு கொண்டு அமைப்பாளர் பதவியில் தொடர்ந்ததுடன், பிரதேசத்திற்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைக் கொண்டு வந்து சேர்ப்பதில் முழு மூச்சாகச் செயற்பட்டார்.
கல்குடா மக்களின் சுத்தமான குடிநீர் கனவை நனவாக்கும் திட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாக அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஆற்று அணைக்கட்டு, வீதிகள், சிறுவர் பூங்கா என மிக முக்கிய தேவைகளை இனங்கண்டு அதன் பணிகளும் இடம்பெற்று வரும் நிலையில், இவரது இராஜினாமா அறிவிப்பு கல்குடா அரசியலில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அணியினை முக்கிய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வழிநடாத்தி வரலாற்றில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள பாரிய பங்களிப்பினை வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட உட்கட்சிப்பூசலால் கல்குடாவில் கட்சி கட்டுக்கோப்பை இழந்து, அமைப்பாளருக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்த நிலையில், கல்குடாவின் அமைப்பாளர் பதவிக்கு புதிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமெனும் வலுவான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இழுபறி நிலை தொடர்ந்த நிலையில், நேற்று 02.01.2019ம் திகதி புதன்கிழமை அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் நெருங்கிய நண்பர்கள், செயற்பாட்டாளர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஒலிப்பதிவில் மிக நீண்ட நாள் கலந்தாலோசனையின் பின்னர் இராஜினாமா முடிவுக்கு வந்ததாகவும், இனிமேல் அரசியலில் ஈடுபடுவதில்லையென்றும், இதன் பின்னர் தன்னை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்க வேண்டாமெனவும், எந்தச்சந்தர்ப்பத்திலும் ஒரு அரசியல்வாதியாக என்னை முன்னிலைப்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டுள்ளதுடன், எனது அரசியல் பயணத்தில் என்னோடு பயணித்த அனைவருக்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது சக்திக்குட்பட்டு தனிப்பட்ட ரீதியில் சமூகத்திற்கான பணி தொடருமெனவும் அதில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழலும் அழுத்தங்களும் அமைப்பாளர் றியாழின் திடீர் இராஜினாமாவுக்கு காரணமென கல்குடா அரசியல் வட்டாரத்தில் பரவலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களால் கல்குடா அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவரின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாளர் றியாழின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுமா?
thehotline.lk
No comments:
Post a Comment