கூட்டமைப்புகளின் அங்கத்துவ கட்சிகள் தனிக்கட்சி அரசியல் செய்யக்கூடாதா? - வை எல் எஸ் ஹமீட் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

கூட்டமைப்புகளின் அங்கத்துவ கட்சிகள் தனிக்கட்சி அரசியல் செய்யக்கூடாதா? - வை எல் எஸ் ஹமீட்

கூட்டமைப்புகளின் வகை, அவற்றிற்கு இருக்க வேண்டிய இலக்குகள் தொடர்பாக முன்னைய கட்டுரைகளில் பார்த்தோம். நமது சமூகத்தில் பேசப்படுகின்ற கூட்டமைப்புகளுக்கு அவ்வாறு இனம்காணப்பட்ட எந்தவொரு இலக்கும் இல்லை. ஆனாலும் கூட்டமைப்பு வேண்டும்.

கூட்டமைப்பிற்கு ஆதரவாக கருத்துரைப்பவர்கள் முன்வைக்கும் பிரதான காரணம் இன்று பல முஸ்லிம் கட்சிகள் தோன்றிவிட்டன. இதனால் வாக்குகள் சிதறுவதால் முஸ்லிம் அரசியல் பலம் கூறுபோடப்படுகிறது. எனவே, முஸ்லிம் கூட்டமைப்பு காலத்தின் தேவை என்பதாகும்.

யாராவது புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது தொடர்பாக பேசினால் அதற்கெதிராக வைக்கப்படும் முதல் விமர்சனம் ‘இருக்கின்ற கட்சிகள் போதாதா? இன்னும் வாக்குகளைப் பிரிக்கப்போகின்றார்களா? ‘என்பதாகும்.

இந்த விமர்சனத்தின் அடிப்படை “முஸ்லிம் சமூகம் சரியான ஒரு கட்சியின் பின்னால் சுயமாக ஒன்றுபடத் தயாரில்லை. முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.” என்பதாகும்.

அதேநேரம் ஒரு கட்சியை எதிர்த்து அடுத்த கட்சியை ஆதரிப்பவர்கள் கூறுகின்ற காரணம் “அந்தக்கட்சி பிழை” என்பதாகும். எனவே, கூட்டமைப்பு கோருபவர்கள் நாங்கள் பிழையென நிராகரித்த அந்தக் கட்சியையும் இணைத்துச் செயற்படுங்கள், வாக்களிக்கின்றோம் என்கிறார்கள்.

மறுபுறம் இருக்கின்ற கட்சிகள் கூடாது என்று புதிய கட்சியை உருவாக்கியவர்களும் வாக்குப்பெறுவதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் அந்தக் கட்சிகளைக் குறைகூறிக் கொண்டு, எல்லாக் கட்சிகளும் வாருங்கள், சமூக நன்மைக்காக கூட்டமைப்பு அமைப்போம் என்கிறார்கள்.

அதாவது, அவர்கள் எந்தக் கட்சிகளைப் பிழையென்றார்களோ, அந்தப் பிழையான கட்சிகளுடன் இணைந்து சமூகத்திற்கு நன்மை செய்ய அழைக்கின்றார்கள். ஆனால் அந்த நன்மை என்ன? அந்த இலக்கு என்ன? என்று கூறமாட்டார்கள். அவர்களுக்கு இலக்கும் தெரியாது. இலக்கும் இல்லை. அவ்வாறானால் சமூகம் எந்த நன்மையை அடைவதற்கு அல்லது எந்த இலக்கை அடைவதற்கு ஒன்றுபட்டு வாக்களிக்க வேண்டும்? அது சமூகத்திற்கும் தெரியாது.

த தே கூட்டமைப் பொறுத்தவரை அவர்கள் ‘சுயாட்சி‘ மற்றும் சில அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள்’ என்ற ஒரு பிரதான இலக்கை நோக்கி இணைந்திருக்கிறார்கள். அந்த இலக்கிற்காகத்தான் மக்கள் வாக்களிக்கின்றார்கள். அந்த இலக்கை நோக்கி அவர்கள் செயற்படுகின்றவரை அவர்களின் தனிக்கட்சி அரசியலில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பிரச்சினைக்குரியதல்ல.

தாம் பிரிந்து போட்டியிட்டால் சமூகத்திற்கு கிடைக்கின்ற ஆசனம் தவறவிடப்படும் அல்லது குறையும் என்பதற்காக அமைக்கின்ற தேர்தல் கூட்டணி தேர்தலில் சமூகத்திற்குரிய ஆசனத்தைப் பெற்றால் போதுமாகும். அது அவர்களது இலக்கு. அதன்பின் அவர்களது தனிக்கட்சி அரசியல் கேள்விக்குரியதல்ல.

இந்த இலக்குகளில் ஏதாவதொன்றிற்காகவா சில முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அல்லது சமூகத்தில் பலரும் கூட்டமைப்பைக் கோரினார்கள் / கோருகிறார்கள்?

மேலே கூறியதுபோன்று நம்மவர்கள் கூட்டமைப்பு கோருவதும் அமைப்பதும் கட்சிகள் ஒற்றுமைப்படுவதற்கும் அதன்மூலம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்கும் அந்த ஒற்றுமை மூலம் கிடைக்கின்ற அரசியல் பலத்தை ஒருமுகப்படுத்தப்பட்டதாக பிரயோகித்து சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது, நல்லது செய்வது என்பதற்காகும். சுருங்கக்கூறின் சமூக மற்றும் கட்சிகளின் ஒற்றுமைதான் இக்கூட்டமைப்பின் அடிநாதம்.

அவ்வாறு ஒன்றுபட்டதாகக் கூறியவர்கள் எவ்வாறு அதன்பின் தனிக்கட்சி அரசியல் செய்வது? அவ்வாறாயின் அதன்பொருள் என்ன? மீண்டும் பல கட்சி அரசியல். சமுதாயம் கூறுபோடப்படல் என்றால் இவர்கள் கூறிய ஒற்றுமை என்ன? இந்தக் கூட்டமைப்பைக் கோரியவர்கள் எதிர்பார்த்த ஒற்றுமை என்ன? இவர்கள் இன்று பிரிந்து தனிக்கட்சி அரசியல் செய்வதற்கு இவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்?

இவர்களையும் த தே கூட்டமைப்பையும் ஒப்பிடமுடியுமா? உதாரணமாக, இன்று பல மார்க்க இயக்கங்கள் சமூகத்தைக் கூறுபோட்டுக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டதிருத்தம் சம்பந்தமாக சரீஆ வைக் கடைப்பிடிக்க அரசைக் கோருவதற்காக பல இயக்கங்களையும் சேர்ந்த ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அரசிடம் பேசச்செல்கிறார்கள்.

இப்பொழுது குறித்த விடயத்தில் அவர்கள் ஒத்த கருத்தில் பேசும்வரை அவர்களை யாரும் அக்கூட்டமைப்பு குறித்து விமர்சிக்க முடியாது. அவர்கள் வழமையான அவர்களது முரண்பாட்டு இயக்கக் கொள்கைகளை முன்னெடுக்கலாம்.

அவர்களது இயக்க செயற்பாடு தொடர்பான வழமையான விமர்சனங்களை முன்வைக்கலாம். அதுவேறு விடயம். ஆனால் கூட்டமைப்பு அமைத்துவிட்டு தனித்தனி இயக்க செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்; என யாரும் கூறமுடியாது. ஏனெனில் அவர்கள் பிரகடனப்படுத்திய இலக்கில் அவர்கள் முரண்படவில்லை. இதைத்தான் த தே கூ செய்கிறது.

மாறாக, இந்த மார்க்க இயக்கங்கள் பிரிந்து செயற்படுவதால் சமூகம் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது. எனவே, ஒன்றுபடுகிறோம்; என்று ஒன்றுபட்டுவிட்டு தனிப்பட்ட இயக்க செயற்பாடுகளை முன்னெடுத்தால் கூறமாட்டீர்களா? இவர்களின் கூட்டமைப்பு ஒரு ஏமாற்று வித்தை; என்று.

அதேபோன்றுதான் எந்த வரையறுக்கப்பட்ட இலக்குமில்லால் கட்சி, அதன்மூலம் சமூக ஒற்றுமைக்காக ஒன்றுபடுகிறோம், தலைமைத்துவத்தை விட்டுக்கொடுத்தோம்; என்றெல்லாம் சொல்லி வாக்குப்பெற்றுவிட்டு பிரிந்து அரசியல் செய்வது ஏமாற்று இல்லையா?

அதுவும் அக்கூட்டமைப்பின் அடுத்த அங்கத்தின், அதன் தலைமைத்துவத்தின் பிரதான வாக்குவங்கி இருக்கின்ற இடத்திலேயே பிரிந்த அரசியலை அரங்கேற்றினால் இணைந்ததன் பொருளென்ன? அந்த வாக்குவங்கியை இலக்குவைத்தா இந்த தனி அரசியல் ?

உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே சூதாட்ட அரசியல் வெளிப்பட்டுவிட்டது. தேர்தலில் பெற்ற ஆசனங்கள் கூட்டமைப்பின் பெயரில் விளம்பரப்படுத்தப்படவில்லை. மாறாக அதில் அங்கம்பெற்ற ஒரு அணியின் பெயரிலேயே விளம்பரப்படுத்தப்பட்டன. தேர்தல் முடிவுகளுக்கும் கூட்டமைப்பிற்கும் எதுவித சம்பந்தமுமில்லை; என்பதுபோல் அது இருந்தது.

அந்த அணியின் சின்னத்தில் போட்டியிட்டதால் அவ்வாறு விளம்பரப்படுத்தப்பட்டது; என்று ஒரு விளக்கத்தை இதற்கு கொடுக்க முற்படலாம். த தே கூ எப்போதும் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுகின்றது. ஆனால் போட்டிமுடிவுகளை அதே கட்சியின் பெயரிலா விளம்பரப்படுத்துகிறார்கள்?

தேர்தல் முடிவானாலும், பாராளுமன்ற செயற்பாடு, வெளிநாட்டுப் பிரமுகர்களைச் சந்தித்தல் என்று எல்லா நடவடிக்கைகளையும் த தே கூட்டமைப்பின் பெயரில்தானே செய்கிறார்கள்.

இந்தக்கூட்டமைப்பு அமைத்து அரைவருடம் கழிந்துவிட்டது. சமூகத்திற்காக இவர்கள் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கை என்ன?

எனவே, தயவுசெய்து சிந்தியுங்கள். சமூகத்தில் பல நடுநிலைவாதிகள் சமூக ஒற்றுமைகருதி கூட்டமைப்பு வேண்டுமென்கிறார்கள். இவர்கள் அதே பல கட்சி அரசியலைச் செய்துகொண்டு சமூகத்தை ஏமாற்ற கூட்டமைப்பு என்கிறார்கள்.

தேர்தல் முடிவுகளை ஒரு அணியின் பெயரில் காட்டி சமூகத்திற்கு எதுவித அபிவிருத்தியும் செய்யமுடியாத அமைச்சைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள். தங்கள் பைல்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

சூதாட்ட அரசியல் தொடர்கிறது. ஏமாளி சமூகம் தொடர்ந்தும் ஏமாறுகிறது.

எனவே, சிந்தியுங்கள். கூட்டமைப்பு என்ற கோட்பாடு தவறானதல்ல. தவறான நோக்கங்களுக்காக கூட்டமைப்புக் கோட்பாடு பாவிக்கப்படக்கூடாது.

பராசக்தி பாணியில் கூறுவதானால், “கோயிலை இடித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக என்பதுபோல் “கூட்டமைப்பு விமர்சிக்கப்படுவது கூட்டமைப்பு கூடாது என்பதற்காக அல்ல கூட்டமைப்பு சூதாட்ட அரசியலின் ஏமாற்றுவித்தையாக இருக்கக்கூடாது, என்பதற்காக என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment