சம்மாந்துறை விவகாரத்தில் சட்டத்தை விட சமூக விழிப்புணர்வூட்டலே மிக அவசியம்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 2, 2018

சம்மாந்துறை விவகாரத்தில் சட்டத்தை விட சமூக விழிப்புணர்வூட்டலே மிக அவசியம்!

சம்மாந்துறையில் அண்மைக் காலமாக விரும்பத்காத, ஒழுக்கக் கேடான சில விடயங்கள் இடம்பெற்று வருகின்றமை கவலை தருகிறது. ஆன்மீகமும் மார்க்கப்பற்றும் இணைந்ததான சமூக ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றும் எனக்கு உவப்பான மக்கள் வாழும் சம்மாந்துறை மண்ணில் ஒரு சிலரின் இவ்வாறான துர்நடத்தைகளால் நான் மன வேதனைப்படுவதுடன் அந்த ஊரின் மகிமையையே கலங்கப்படுத்துகிறது.

இந்த நிலையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒரே தன்மையைக் கொண்ட இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று ஊர்மக்களும் பிரமுகர்களும் மௌனமாக இருக்கக் கூடாது. சட்டம் தனது கடமையை நிச்சயமாகச் செய்யும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால், தீர்ப்புகள் சற்றுக் காலம் கடந்தனவாகவே கிடைக்கும். அந்த இடைவெளிக்குள் இவ்வாறான சமூகச் சீர்கேடான சம்பவங்கள் பல அரங்கேறி விட வாய்ப்புகள் ஏற்பட்டு விடும் அல்லவா?

எனவே, இவ்வாறான விடயங்களில் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே முதலாவது அவசர சிகிக்சையாக அமைய வேண்டும். பள்ளிவாசல்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் இது தொடர்பில் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டும்.

எனவே, இவ்வாறான விடயங்களை சட்டத்தின் தலையில் மட்டும் சுமத்தி விட்டு நாம் பேசாமல் இருக்கக் கூடாது. சமூகத்தின் பொறுப்பும் பிரதான பாத்திரமாக அமைய வேண்டும்.

சம்மாந்துறையில் இறுதியாக நடந்த மிக மோசமான சம்பவம் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லையே என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர். ஆனால், அது தவறு பொலிஸார் அவர்களது கடமைகளை இந்த விடயத்திலும் சரியாகவே செய்துள்ளனர் என்பது எனக்குத் தெரியும். ஒரு முறைப்பாட்டை பொலிஸில் செய்வதால் ஒருவரைக் கைது செய்ய முடியுமென எமது மட்டத்திலிருந்து சிந்திப்பது தவறானது. சான்றுப் பொருள் ஏதேனும் இருப்பின் குறித்த நபரைக் கைது செய்ய வாய்ப்பிருக்கலாம்.

ஒருவர் கையில் கஞ்சாவுடன் காணப்பட்டால் குறித்த கஞ்சாவை சான்றுப் பொருளாக வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்யலாம். ஆனால், அதற்காக அவரைக் குற்றவாளியாக்கி விட முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறான ஒருவரை நிரபராதி என்று கூட நீதிமன்றம் தீர்ப்பும் வழங்கலாம். அதற்கான அகப் புறக் காரணிகள் ஏராளம் உள்ளன.

மேலும், இந்த விவகாரம் சமூகக் கட்டமைப்புடன் தொடர்புடைய ஒன்று என்பதாலும் வேறு சில காரணங்களாலும் பொலிஸாரல் குறித்த நபரைக் கைது செய்ய முடியாது. மாறாக நீதிமன்றின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவிலேயே பொலிஸார் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இந்த விடயத்தில் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியும் ஏனையோரும் சட்டப்படியே செயற்படுகின்றனர்.

குறித்த நபருக்கு எதிரான வழக்கு இம்மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகவே சட்டம் தனது கடமையைச் சரியாகச் செய்யும்.

இதேவேளை, குறித்த பெண் தொடர்பான விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட நபர் பிழை விட்டுள்ளார். அல்லது அந்தப் பெண்ணின் பிழையான போக்கே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என எங்களுக்குள் பேசிக் கொள்வதனையும் நியாயப்படுத்துவதனையும் விடுத்து இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் சமூக மட்டத்தில் முன்னெடுப்பது அவசியம்.

மேலும், இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆண் நபர் அரசியல்வாதி ஒருவரின் உறவினர் என்பதால் அவர் அரசியல் பலத்தைப் பிரயோகித்து சட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம் என்ற நியாயமான சந்தேகங்கள் பலருக்கும் எழுந்துள்ளன. குறிப்பிட்ட நபர் வெளிநட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் சில நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் பலரை நான் இன்று (02) காலையில் தொடர்புகொண்டு பேசினேன். இந்த விடயத்தில் அரசியல் அழுத்தங்கள் தங்கள் மீது பயன்படுத்தப்படவில்லை என்றும் அவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும் அவற்றுக்கு தாங்கள் துணை போகமாட்டோம் எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பத்துடன் தொடர்புடைய நபர் அல்லது சம்பவத்துக்கு உடந்தையான இன்னொரு நபர் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப்படுவது தொடர்பிலும் அவர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தேன். அவ்வாறு நடைபெறாமலிருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

எனவே, சட்டம் தன் கடமையை இந்த விடயத்தில் சரியாகச் செய்யும் என்பதில் சந்தேகிக்கத் தேவை இல்லை. ஆனால், இவ்வாறான விடயங்களை சமூக மட்டத்தில் தீர்த்துக் கொள்வதே சிறந்தது என நான் நினைக்கிறேன். அதற்கான விழிப்புணர்களை ஏற்படுத்த வேண்டும். விசேடமாக, பெண்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் சென்றடைய ஆக்கபூர்மான செயற்பாடுகள் அவசியமாகின்றன.

மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆண் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயற்சித்த, விமர்சனங்களை முன்வைத்த சிலரை, சிலர் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறனவர்கள் பொலிஸில் இது தொடர்பில் முறையிடலாம். அவ்வாறு முறையிடுவதில் நீங்கள் அச்சமடைந்தால் உங்களை எச்சரித்த நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் அல்லது ஒலிப்பதிவுகளை எனக்கு அனுப்பி வையுங்கள் மற்றையவற்றை நான் பார்க்கிறேன்.

ஏ.எச்..சித்தீக் காரியப்பர்

No comments:

Post a Comment