ஜனாதிபதி தலைமையில் தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 3, 2018

ஜனாதிபதி தலைமையில் தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல்

தேசிய பழ விவசாயிகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் காரணமாக தேசிய பழ விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்காக பின்பற்றப்பட வேண்டிய முறைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தேசிய பழ விவசாயிகளை முன்னேற்றுவதற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய நிகழ்ச்சித் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது, தொழில் முயற்சியாளர்கள் என்ற வகையில் அவர்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

சுவை மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த உள்நாட்டு பழங்களை பயன்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

அறுவடை காலத்தில் மேலதிகமாக கிடைக்கும் அறுவடைகளை நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்வதற்கான மாற்று தொழில்நுட்ப முறைமைகளை பழ விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் நாடளாவிய நிகழ்ச்சித் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

விலங்குகளினால் விவசாய துறைக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர் றிஷாத் பதியுதீன், கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சின் செயலாளர் கே.டீ.என்.ரஞ்சித் அஷோக, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் டி.விஜேரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

No comments:

Post a Comment