செனட் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி - நவாஸ் செரீப் மீண்டும் பிரதமராக வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 4, 2018

செனட் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி - நவாஸ் செரீப் மீண்டும் பிரதமராக வாய்ப்பு

செனட் தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதால் பாகிஸ்தானில் நவாஸ் செரீப் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பாகிஸ்தானில் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்த நிலையில் ஊழல் வழக்கு தொடர்பாக பிரதமர் பதவியில் இருந்து கடந்த ஜூன் மாதம் நவாஸ் செரீப் நீக்கப்பட்டார்.

இந்த நடவடிக்கையை சுப்ரீம் கோர்ட்டு மேற் கொண்டது. தற்போது அவரது முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரின் பதவியும் பறிக்கப்பட்டது. இந்தநிலையில் சமீபத்தில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மேல் சபையான ‘செனட்’ சபை உறுப்பினர் தேர்தல் நடந்தது.

52 இடங்களுக்கு ரகசிய ஓட்டு மூலம் தேர்தல் நடைபெற்றது. அதில் நவாஸ் செரீப் கட்சி 15 இடங்களில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் - சபையில் நவாஸ் செரீப் கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது.

இதை மிகப்பெரிய வெற்றியாக அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக நவாஸ் செரீப்பின் மகள் மரியம் டுவிட்டரில் இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நவாஸ் செரீப் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செனட் தேர்தலில் அதிக இடங்களை பிடித்ததன் மூலம் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது.

பாகிஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தற்போது மேல் சபையில் தனி மெஜாரிட்டி கிடைத்திருப்பதன் மூலம் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நவாஸ் செரீப் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை உருவாக்கி அவர் பிரதமராகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அக்கட்சி குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காக்கிறது.

No comments:

Post a Comment