பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர், சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பிரகாரம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பி.பீ. தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவரது விலா எலும்பு முறிந்துள்ளமை அவதானிக்கப்பட்ட போதும், அது தொடர்பில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சையின் பின் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய நடவடிக்கைகளில் உறுதியானதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி விகாரையில் வைத்து, விகாரை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படும் பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் தேரர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு வைத்து தேரர் உயிரிழந்த நிலையில், மீள களுபோவில வைத்தியசாலையில் செய்யப்பட்ட சட்ட வைத்திய பரிசோதனைகளின் போதே மரணத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
காலஞ்சென்ற பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளன.
No comments:
Post a Comment