கொரோனாவை வைத்து அரசாங்கம் தனக்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றுகிறது : தற்போது நாட்டு மக்களின் கல்வி உரிமையை படுகுழியில் தள்ளுவதற்கும் முயற்சி - புத்திஜீவிகள் பேரவை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

கொரோனாவை வைத்து அரசாங்கம் தனக்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றுகிறது : தற்போது நாட்டு மக்களின் கல்வி உரிமையை படுகுழியில் தள்ளுவதற்கும் முயற்சி - புத்திஜீவிகள் பேரவை

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளும் போக்கைக் காண முடிகின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டு மக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது என்று மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவையின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு அவர்கள் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்தினால் நாட்டின் இலவசக் கல்விக் கட்டமைப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டிலுள்ள பொதுவான பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுக்கும் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரையறைகளுக்கும் முரணான வகையில் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு இந்தச் சட்ட மூலம் வாய்ப்பளிக்கின்றது.

அத்தோடு இந்தச் சட்ட மூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகம் உயர் கல்வியமைச்சின் கீழிருந்து பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும்.

உரிய சட்ட வரையறைகளின்படி நிறுவப்பட்ட கட்டமைப்புக்களின் ஊடாக இராணுவ மற்றும் பாதுகாப்புத் துறைசார் பயிற்சி வழங்கப்படுவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை. அத்தகைய பயிற்சி வழங்கல் கட்டமைப்புக்களின் மூலம் இராணுவ மற்றும் போர்ப் பயிற்சி மாத்திரமன்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் பாங்கு, பல்வேறு சமூகப் பிரிவுகளுடன் ஒன்றிணைந்து பணியாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்தின் ஊடாக நிறுவுவதற்கு எதிர்பார்க்கும் கட்டமைப்பானது சாதாரண பல்கலைக்கழகங்களைப் போன்றதல்ல. மாறாக அது இராணுவ மற்றும் பாதுகாப்புத் துறைசார் பயிற்சிகளை வழங்குவதை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக புதிய சட்ட மூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுபவர்கள் புத்திஜீவிகளும் கல்விமான்களும் அல்ல. மாறாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பல்கலைக்கழத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர், நிதியமைச்சினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரே இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையில் அங்கம் வகிக்கப் போகின்றார்கள். ஆகவே பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளே இந்த நிர்வாக சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளும் போக்கைக் காண முடிகின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டு மக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது.

ஆகவே இந்தச் சட்ட மூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, நாட்டினதும் பொதுமக்களினதும் ஜனநாயகத்தன்மைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment