நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கின்றது - ருவன் விஜேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திறமை ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கின்றது - ருவன் விஜேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திறமையும் அது தொடர்பான வேலைத்திட்டங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கே இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் ஒருபோதும் வீழ்ச்சியடைந்ததில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வந்த வத்தளை நகர சபை உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளமை தொடர்பில் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த பொதுத் தேர்தலின் போது சஜித் பிரேமதாச கட்சியை பிளவுப்படுத்தி விட்டு பிரிந்து சென்று வேறு கட்சி ஒன்றை அமைத்தார். இதனால் ஐக்கிய தேசிய கட்சி உள்ளூராட்சி மன்றங்களில் இருந்த உறுப்பினர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் சிலர் அவர்களுடன் இணைந்து செயற்பட்டனர். மேலும் சிலர் எந்த பக்கமும் சாயாமல் இருந்தனர். தற்போது அவர்களில் அதிகமானவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்கின்றனர். அந்த வகையில் வத்தளை நகர சபை உறுப்பினர்களும் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர். இவர்கள் மீண்டும் எம்முடன் இணைந்து கொண்டுள்ளமை எமக்கு பெரும் சக்தியாகும்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து செல்வதுடன் மக்களும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய நிலைமையில் எதிர்வரும் காலங்களில் சிறந்த வேலைத்திட்டங்களை முன்வைத்து செயற்படக்கூடிய கட்சியினாலே இந்த நாட்டை கட்டியெழுப்பலாம். 

அந்த வகையில் மக்களின் பிரச்சினை, நாடு சந்தித்துள்ள நெருக்கடியில் இருந்து மீட்பது குறித்து பழைமை வாய்ந்த கட்சி என்ற வகையில் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி வருகின்றோம். எமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் நாங்கள் மக்களுக்கு அறிவிப்போம். கட்சியையும் பலப்படுத்திக் கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்வதே எமது குறிக்கோளாகும். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இருப்பது ஐக்கிய தேசிய கட்சியிடமாகும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சி நாட்டை ஆட்சி செய்ய எந்தவொரு காலகட்டத்திலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியடைந்தே சென்றிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தோல்வியடைந்து, வேறு அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5, 10 வருடங்கள் செல்லும்போது நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து கொண்டே செல்கின்றது. 

பின்னர் மீண்டும் எமது கட்சி அதிகாரத்துக்கு வந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கின்றது. அப்போது, சில கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்படுகின்றது. சில வேளைகளில் அந்த தீர்மானங்கள் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்போது, அடுத்த தேர்தலில் எமது கட்சியை தோற்கடிக்க செய்கின்றனர். பின்னர் மீண்டும் வேறு அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துவிட்டு செல்கின்றது. இதுவே தொடர்ந்து இடம்பெறுகின்றது.

எனவே, அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்காலத்திலும் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம். ஏனெனில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திறமையும் அதுதொடர்பான முறையான வேலைத்திட்டமும் ஐக்கிய தேசிய கட்சியிடமே இருக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment