ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையில் அரசாங்கம் கூறப்போகும் பதில் என்ன ? : பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன? - லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையில் அரசாங்கம் கூறப்போகும் பதில் என்ன ? : பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன? - லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையில் அரசாங்கம் கூறப்போகும் பதில் என்ன, பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைக்க அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்னவென எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான தீர்மானம் எடுக்க முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்த விடயத்தில் அமைச்சர் அலி சப்ரிக்கும், லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் நீதி அமைச்சர் கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சில்லறைத்தனமானது. குறிப்பாக நீதிமன்றத்திற்கு செய்ய வேண்டிய அநியாயம் அனைத்தையும் அரசாங்கம் செய்து முடித்துவிட்டது. ஆட்சி அமைத்து குறுகிய காலத்திலேயே 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றி நீதிமன்ற அதிகாரத்தை மட்டுமல்ல சகல சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களையும் ஜனாதிபதியின் கைகளுக்கு எடுத்துக் கொண்டார்.

இப்போது நீதிமன்ற சுயாதீனம் குறித்து அரசாங்கம் பேசுவதில் நியாயமில்லை. அரசாங்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் மோசமானது, இதனை நாட்டு மக்களோ அல்லது சர்வதேசமோ எதிர்பார்க்கவில்லை. நாம் 19 வது திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்தி நீதிமன்ற சுயாதீனத்தை பலப்படுத்தினோம். அரச நிறுவனங்களை சுயாதீனமாக்கினோம், அரசியல் அமைப்பு சபையொன்று உருவாக்கப்பட்டது. இவற்றை மீண்டும் நாசமாக்கிவிட்டு எவ்வாறு நீங்கள் சுயாதீன நீதிமன்றம் பற்றி பேச முடியும்.

ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்ள அரசாங்கம் என்ன செய்துள்ளது? செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் அரசாங்கம் கூறப்போகும் பதில் என்ன? அரசாங்கமாக ஐக்கிய நாடுகள் முன்னிலையிலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னிலையிலும் என்ன கூறப்போகின்றீர்கள்? இதற்கு அமைச்சர் பதில் கூற முடியுமா என்றார்.

இதன்போது பதில் கூறிய நீதி அமைச்சர் அலி சப்ரி வெளிவிவகார அமைச்சரின் தலைமையில் குழு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியாக தீர்வுகள் மற்றும் பதில் கூறியுள்ளோம். இந்த விடயங்களை செய்யும் போது நாட்டின் சுயாதீனம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு வரும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. ஆனால் செய்ய முடிந்த மற்றும் செய்ய வேண்டிய மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பது குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்று திருத்தங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகின்றோம். இதில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்தி, மனித உரிமைகள் குறித்த வேலைத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அவற்றையும் அடையாளம் கண்டு அதற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி, தடுப்புக் காவலை ஒரு மாத காலத்திற்கு மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும், ஒருவர் கைது செய்யப்பட்டால் 48 மணித்தியாலங்களில் நீதிபதி முன்னிலையில் ஒப்படைக்க வேண்டும், பொலிசாரிடம் கொடுக்கும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பெற்றுக் கொள்ளாது நீதிபதி முன்னிலையில் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா ?

அமைச்சர் அலி சப்ரி உங்களின் ஆட்சியில் ஏன் இவற்றை செய்யவில்லை. இந்த திருத்தங்கள் எல்லாம் அப்பம் சுடுவதை போன்று செய்ய முடியாது. மாற்றங்களை செய்ய காலம் தேவைப்படும். இவற்றை கையாள விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லக்ஸ்மன் கிரியெல்ல நான் கேட்ட சாதாரண கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காது கட்டிடம் கட்டுவது குறித்து பேசிக் கொண்டுள்ளீர்கள். மஹிந்த ஆட்சிக் காலத்தில் பறிக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை எமது ஆட்சியில் பெற்றுக் கொண்டோம். நல்லாட்சியின் நோக்கங்களில் சர்வதேசத்திற்கு சந்தேகம் இருக்கவில்லை என்பதனாலே எமக்கு இந்த சலுகைகள் கிடைத்தது.

அமைச்சர் அலி சப்ரி நீங்கள் சர்வதேசத்திடம் இருந்து ஜி.எஸ்.பி சலுகையை பெற்றீர்கள், ஆனால் தேசிய பாதுகாப்பு நாசமாக்கப்பட்டது. இந்த இரண்டுமே சமமாக கையாளப்பட வேண்டும். இல்லையேல் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும். தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவும் முடியாது. தேசிய பாதுகாப்பை பாதுகாப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்ட மூலத்தை கொண்டுவருகின்றோம்

லக்ஸ்மன் கிரியெல்ல சர்வதேசத்தை ஏமாற்றும் சில்லறைத்தனமான திருத்தங்களை கொண்டுவராது உண்மையான நோக்கங்களுக்காக முறையான திருத்தங்களை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment