கிராம மக்களிடம் 'இப்போது நலமா?' என்று கேட்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம் - கயந்த கருணாதிலக - News View

About Us

About Us

Breaking

Sunday, July 4, 2021

கிராம மக்களிடம் 'இப்போது நலமா?' என்று கேட்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றோம் - கயந்த கருணாதிலக

(எம்.மனோசித்ரா)

உரத்தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் கிராமத்துடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, கிராம மக்களிடம் 'இப்போது நலமா?' என்று கேட்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், உலகில் முதன்முறையாக சுமார் ஒரு மணித்தியாலயம் நாட்டு மக்களுக்கு உரையாற்றியவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாத்திரமே. ஆனால் அவரது நீண்ட உரையில் அரசாங்கத்தின் இயலாமையும் தோல்வியும் மாத்திரமே வெளிப்படுத்தப்பட்டது. இப்போதுதான் நாட்டின் நிலை என்ன என்பதை ஜனாதிபதி உணர்ந்து கொண்டுள்ளார்.

சகோதரர் கூறியதைக் கேட்டு இலவசமாக விவசாயிகளுக்கு உரத்தை வழங்குவதாகக் கூறிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவ்வாறு கூறியபோது இரசாயன உரம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதை அறிந்திருக்கவில்லையா? தற்போது திடீரென கனவிலிருந்து எழுந்ததைப் போன்று இரசாயன உர பாவனைக்கு தடை விதித்துள்ளார்.

நாட்டின் செயற்பாட்டு முறைமை மாற்றமடைய வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார். அவர் எதிர்பார்த்ததைப் போன்று தற்போது மூன்று வேளை உணவு உட்கொண்ட மக்கள் தற்போது ஒரு வேளை மாத்திரம் உண்ணும் வகையில் தமது நடைமுறையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் கிராமத்துடன் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, கிராம மக்களிடம் 'இப்போது நலமா?' என்று கேட்குமாறு ஜனாதிபதிக்கு சவால் விடுகின்றோம். கடந்த காலங்களைப் போன்று போலி நாடகங்களை அரங்கேற்றாமல் உரிய நடைமுறை சாத்தியமான தீர்வை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment