அரசாங்கம் மேற்கொள்ளும் சட்ட திருத்தம் எமது நாட்டில் மனித உரிமையை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்காக மேற்கொள்ள வேண்டும் - விஜித் ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 7, 2021

அரசாங்கம் மேற்கொள்ளும் சட்ட திருத்தம் எமது நாட்டில் மனித உரிமையை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்காக மேற்கொள்ள வேண்டும் - விஜித் ஹேரத்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டத்தில் எவ்வாறான திருத்தங்களை மேற்கொண்டாலும் அதனை எவ்வாறு செயற்படுத்துகின்றது என்பதை அடிப்படையாக் கொண்டே அந்த திருத்தங்கள் ஆரோக்கியமானதா இல்லையா என தீர்மானிக்கப்படுகின்றது. அதனால் அரசாங்கம் மேற்கொள்ளும் சட்ட திருத்தம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களுக்காக மேற்கொள்ளாமல் எமது நாட்டில் மனித உரிமையை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்காக மேற்கொள்ள வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நீதி அமைச்சின் கீழ் இருக்கும் குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட் சட்ட திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் மேற்கொள்ளும் சட்ட திருத்தம் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களுக்காக மேற்கொள்ளாமல் எமது நாட்டில் மனித உரிமையை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்காக மேற்கொள்ள வேண்டும். 

ஆனால் அரசாங்கம் 20ஆவது திருத்ததை மேற்கொள்ளும்போது நாட்டு மக்கள், மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு தெரிவித்த இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு வருவதற்கு இருந்த தடையை இல்லாமலாக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அமெரிக்க பிரஜா உரிமை உள்ள ஒருவர் பாராளுமன்றத்துக்கு வருவதை எமது மக்கள் ஆதரிப்பதில்லை. என்றாலும் தனி ஒரு நபரின் தேவைக்காக நாட்டின் அடிப்படை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மேலும் சட்டத்தில் எவ்வாறான திருத்தங்களை மேற்கொண்டாலும் அதனை எவ்வாறு செயற்படுத்துகின்றது என்பதை அடிப்படையாக் கொண்டே அந்த திருத்தங்கள் ஆரோக்கியமானதா இல்லையா என தீர்மானிக்கப்படுகின்றது. 

விசேடமாக பொலிஸாரின் தடுப்புக் காவலில் பல்வேறு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு மனிதாபிமானமற்ற சித்திரவதைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அரச உதவியுடனே இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அதேபோன்று கொவிட் தொற்றுக்கு மத்தியில் நீதிமன்றங்களினால் பாரிய குற்றவாளிகள் விடுவித்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். நீதிமன்றங்களுக்கு அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் இருக்கின்றன. அதனாலே இவ்வாறு திடீரென விடுவிக்கப்படுகின்றார்கள். 

நீதிமன்றங்களுக்கு விடுக்கப்படும் ஒரு சில அழுத்தங்களினாலேயே வழக்கு தீர்ப்புகளில் இவ்வாறான மாற்றங்கள் ஏற்படுவதை சிறு பிள்ளைகளுக்கும் விளங்கிக் கொள்ள முடியும். பிணைமுறி மோசடிகாரர்களின் வழக்கு விசாரணைகள் இவ்வாறு இழுத்தடிக்கப்படுவது எவ்வாறு?

மேலும் தற்போது இடம்பெறும் பாரிய பிரச்சினைதான், சமூக வலைத்தலங்களை பயன்படுத்துபவர்களை கைது செய்வது. உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டதென்று தெரிவித்தே கைது செய்யப்படுகின்றார்கள். உண்மைக்கு புறம்பான செய்தி என்று அதனை அரசாங்கமும் பொலிஸாருமா தீர்மானிப்பது? ஐ,சீ.சீ.பீ.ஆர் சட்டத்தின் சில சரத்துக்களை மீறியே பொலிஸார் கடந்த காலங்களில் இளைஞர்ளை கைது செய்திருந்தனர். 

அதேபோன்று கருந்து ஜயவர்த்தன என்ற ஊடகவியலாளர் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்திருக்கின்றார். ஆனால் இதுவரை அது தொடர்பில் ஒரு வாக்குமூலமேனும் பெறவில்லை. இது தொடர்பாக ஊடக அமைப்புக்கள் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர், சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்திருக்கின்றன. ஆனால் விசாரணையும் இல்லை வாக்குமுலம் பெறப்படவில்லை.

எனவே சட்டத்தின் சுயாதீனத் தன்மையின் உரிமை செற்படுவதாக இருந்தால், பேச்சு மற்றும் வெளியிடும் உரிமை சரியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனை மீறி செயற்படுவதை ஒருபோது அனுமதிக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment