அபிவிருத்தி திட்டங்களுக்கு இனவாத சாயம் பூச வேண்டாம் : ஒத்துழைப்பு வழங்குங்கள் - முன்னாள் பிரதேச செயலாளர் சலீம் வேண்டுகோள்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

அபிவிருத்தி திட்டங்களுக்கு இனவாத சாயம் பூச வேண்டாம் : ஒத்துழைப்பு வழங்குங்கள் - முன்னாள் பிரதேச செயலாளர் சலீம் வேண்டுகோள்!

நூருல் ஹுதா உமர்

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கல்முனை - மாவடிப்பள்ளி வீதியை புனரமைக்க இன, பிரதேச மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பிரதேச செயலாளரும், பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்எம். சலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், அபிவிருத்தி என்பது இன, பிரதேச மற்றும் அரசியல் சிந்தனைக்கு அப்பால் பார்க்கப்பட வேண்டிய விடயம். இந்த அபிவிருத்திக்கான உண்மையான உரிமையாளர்கள், பயனாளிகள் பிற் சந்ததியினரே ஆகும். குறுகிய எண்ணத்தில் சுயநல அடிப்படையில் இன்று தடுக்கலாம் ஆனால், சிறிது காலத்தின் பின்னர் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

கடந்த பல ஆண்டுகளாக இவ்வீதி புனரமைப்பு சம்பந்தமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது இப்போதுதான் கைகூடியுள்ளது. இலங்கை முழுவதும் ஒரு இலட்சம் கிலோ மீட்டரில் சுமார் 5 கிலோமீட்டர் அளவில் மட்டுமே இவ்வீதி உள்ளது. இவ்வீதி தார் மற்றும் கொங்கிரீட் வீதிகளாக அமைக்கப்படவுள்ளது.

எனவே இவ்வீதி புனரமைப்பு மூலம் யாருடைய காணிகளையும் கபளீகரம் செய்ய முடியாது. அத்துடன் தற்பொழுது இருக்கின்ற அளவான பாதை மட்டுமே போடப்படவுள்ளது. எனவே சுயமான அனுமானங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிழையான எண்ணக் கருக்கள் விதைப்பதை ஒரு சில அரசியல் வாதிகள் நிறுத்த வேண்டும்.

கல்முனை - மாவடிப்பள்ளி வீதி என்பது இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. அப்பாதையால் விவசாயிகள் மட்டுமல்ல, உத்தியோகத்தர்கள், வியாபாரிகள் என்று பலரும் நாளாந்தம் பிரயாணம் செய்கின்றனர். இதற்குக் முக்கிய காரணம் கல்முனை - அக்கரைப்பற்று வீதி வாகன நெரிசல் மிக்கதாக காணப்படுவதேயாகும்.

இப்பாதையின் அவசியம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏறப்பட்ட சுனாமியின் போது வெகுவாக உணரப்பட்டது. மாற்றுப்பாதை என்பது எமது பிரதேசத்து மக்களுக்கு மிகவும் அவசியமானது. அது மட்டுமன்றி கல்முனை - மாவடிப்பள்ளி வீதியில் சுனாமி குடியேற்ற கிராமங்கள் இரண்டு கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன் கடந்த காலங்களில் இவ்வீதி செப்பனிடப்படாமல் காணப்பட்டதால் விலங்கு குப்பைகள் மட்டுமன்றி, கட்டிட மற்றும் இதர குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறி வருகின்றது.

இந்நிலையில் இவ்வீதி புனரமைப்பு செய்வதற்கு தடையாக இல்லாமல் எல்லோரும் ஒத்தாசையாக இருக்க வேண்டியது எமது கடமையாகும். இன்றேல் பிற்சந்ததியினரின் எதிர்கால அபிவிருத்திக்கு குந்தகம் விளைவித்த குற்றம் எம்மை வந்தடையும் என்பது திண்ணம் என்றார்.

No comments:

Post a Comment