ஊடகவியலாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் : பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ள ஊடக அமைப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 3, 2021

ஊடகவியலாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் : பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ள ஊடக அமைப்புக்கள்

(எம்.மனோசித்ரா)

ஊடகவியலாளர் ஒருவர் முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்த செய்தியொன்று தொடர்பில், கருத்து பதிவிட்டு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறித்த ஊடகவியலாளருக்கு விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுடைய மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குறித்த ஊடக அமைப்புக்கள் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.

ஊடக சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை தொழிற்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன இணைந்து பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறித்த ஊடகவியலாளர் பொய்யான செய்தியினை வெளியிட்டதாகவும், அதற்கு இயற்கை தண்டனையளிக்கும் எனவும் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரபாகரன் மற்றும் ஏனைய குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பதை அவதானிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் இதன்போது தான் எழுதிய பொய்யான செய்தி எது என வினவியுள்ள நிலையில், அதற்கு உறுதியான பதிலொன்று தேசபந்து தென்னகோனால் அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஒரு இடத்தில் மட்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான செய்தியொன்று தொடர்பில் அவரால் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த 2021 ஜூன் 29 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்த பதிலே குறித்த செய்தியின் மூலமாகும்.

அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் அவதானிக்கும் போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கருத்துப்பதிவு பதிலில் கடுமையானதொரு எச்சரிக்கை உள்ளடங்கியிருப்பதாக ஊடக அமைப்புக்களின் கூட்டு எனும் வகையில் நாம் நம்புகின்றோம்.

பொய்யான செய்தியை பிரசுரித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டு தற்போதும் தடுப்பில் உள்ள பெரும்பாலானோருக்கு எதிராக முறையாக நீதிமன்றங்களில் குற்றச்சாட்டுக்கள் கூட முன்வைக்கப்பட்டிராத பின்னணியில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளருக்கு அளித்துள்ள பதில் கருத்துக்கள் தொடர்பில் மிக்க அவதானம் செலுத்துமாறு கோருகிறோம். 

அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணை ஒன்றினை முன்னெடுத்து, ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோருகின்றோம் என்றுள்ளது.

No comments:

Post a Comment