பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிராக இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(நா.தனுஜா)

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டமைக்கும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் எதிராக இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரஜைகளின் உரிமைகள் இவ்வாறான முறையில் மீறப்படாதிருப்பதை உறுதி செய்யுமாறு அம்முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள அதேவேளை, தற்போது வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அண்மையில் கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கு எதிராக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, நுகேகொட - மிரிஹான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மிரிஹான பொலிஸ் நிலையக் காரியாலயத்தின் நுகேகொட பிரிவிற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி சி.டி.லியனகே, மிரிஹான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் மேல் மாகாண தென் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி.கடுபிட்டிய, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி (பாராளுமன்ற சுற்று வட்டம் உள்ளடங்கும் பகுதிக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி), முல்லைத்தீவு விமானப் படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, முல்லைத்தீவு விமானப் படைத் தளம் அமைந்துள்ள பகுதிக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலே பெயர்குறிப்பிடப்பட்ட தரப்பினருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாட்டில் குறிப்படப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக கடந்த 8 ஆம் திகதி (வியாழக்கிழமை) பாராளுமன்ற சுற்று வட்டத்திற்கு அண்மையில் இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன.

அமைதியான முறையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த மேற்படி ஆர்ப்பாட்டம் தொடர்பில் தகவல்களை அறிந்துகொண்ட தலங்கம, நுகேகொட - மிரிஹான ஆகிய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் குறித்த இடத்திற்கு வருகை தந்து, 'ஆர்ப்பாட்டத்தை நடாத்த வேண்டாம்' என்று சட்டவிரோத உத்தரவொன்றையும் பிறப்பித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்களிப்பு வழங்குவதற்காக வருகை தந்திருந்த பெண்கள், பௌத்த தேரர்கள் உள்ளிட்ட தரப்பினரைத் தாக்கித் துன்புறுத்தியதுடன் அவர்களை வலுகட்டாயமாக இழுத்துச் சென்று பஸ் வண்டிகளில் ஏற்றினார்கள்.

அவ்வாறு சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட குழுவினரை தலங்கம மற்றும் நுகேகொட - மிரிஹான பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று நெடுநேரமாகத் தடுத்து வைத்திருந்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் வெலிக்கட பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டார்கள்.

பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே வந்ததும், அவர்களில் ஒரு பிரிவினரை பொலிஸார் மீண்டும் வலுக்கட்டாயமாக பஸ் வண்டிகளில் ஏற்றினார்கள். தனிமைப்படுத்துவதற்காக அவர்களை அழைத்துச் செல்வதாகப் பொலிஸாரால் கூறப்பட்ட போதிலும், அவ்விடத்தில் சுகாதாரப் பிரிவின் எந்தவொரு அதிகாரிகளும் இருக்கவில்லை.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர், தாம் மீண்டும் பலவந்தமாக பஸ் வண்டிகளில் ஏற்றப்படுவதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டிய போதிலும், அதனை எவரும் கருத்திற் கொள்ளவில்லை. அவர்களை அழைத்துச் செல்லும் இடம் குறித்த விபரங்களும் அறிவிக்கப்படவில்லை.

அன்றையதினம் இரவு அவர்களனைவரும் பஸ் வண்டியில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவில் உள்ள இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், ஜோசப் ஸ்டாலின் மற்றும் மூன்று பெண்கள் உள்ளிட்ட பிரிவினர் அங்குள்ள விமானப் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அது முல்லைத்தீவு விமானப் படைத் தளம் என்று அவர்கள் அடையாளங்கண்டு கொண்டனர்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் மேலே பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட தரப்பினரால் அரசியலமைப்பின் 11, 12(1), 13(1), 13(2) மற்றும் 14(1) ஆகிய சரத்துக்களின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றது என்பது இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் நிலைப்பாடாகும்.

அதேவேளை இந்த முறைப்பாட்டை அளிக்கும் எமது (இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்) சங்கத்தின் உறுப்பினர்கள் எதிர்காலத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால், பொலிஸாரும், சுகாதாரப் பிரிவினரும் மீண்டும் மேற்கூறப்பட்ட வகையில் செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உயர்வாக உள்ளன. இவ்வாறான செயற்பாடுகளினால் எமது சங்க உறுப்பினர்கள் மாத்திரமன்றி, அனைத்துப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகள் மீறப்படக்கூடும்.

ஆகையில் இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோன்று மிகவும் மோசமான முறையில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு தற்போதும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இம்முறைப்பாட்டில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருக்கும் நபர்களால் மேலே சம்பவத்தில் விபரிக்கப்பட்ட தரப்பினரின் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தும் அதேவேளை, தண்டனைச் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பிரதிவாதிகளுக்கு எதிராக உரியவாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு மேற்குறிப்பிட்டவாறான முறையில் இலங்கைப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதைத் தடை செய்வதற்கு அவசியமான பரிந்துரைகளை முன்வைப்பதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குப் பிரதிவாதிகளால் நட்டஈடு வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment