வங்குரோத்துப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பஷில் முன்வந்துள்ளார், அபிவிருத்தித் திட்டங்களும் நம்பிக்கையோடு இடம்பெறுகின்றன - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 13, 2021

வங்குரோத்துப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பஷில் முன்வந்துள்ளார், அபிவிருத்தித் திட்டங்களும் நம்பிக்கையோடு இடம்பெறுகின்றன - நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள வங்குரோத்துப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே பஷில் முன்வந்துள்ளார். அதன் காரணமாக அபிவிருத்தித் திட்டங்களும் நம்பிக்கையோடு இடம்பெறுகின்றதென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 13.07.2021 இடம்பெற்ற வீட்டுக்கு வீடு தென்னை மரம் வளர்க்கும் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்கான தென்னங் கன்றுகள் விநியோகத்தை அவர் ஆரம்பித்து வைத்தார்.

தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய உதவிப் பணிப்பாளர் கே. ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 250 குடிமனைப் பயனாளிகளுக்கு தலா இரண்டு கன்றுகள் வீதம் 500 பொதியிடப்பட்ட நல்லின தென்னங் கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட், எல்லாமே வங்கு ரோத்து நிலைக்குச் சென்றுவிட்டது என்று கூறப்படுகின்ற இந்தக்கால கட்டத்திலே சகலவற்றையும் மாற்றியமைக்கும் சவாலை எதிர்கொண்டு நிதியமைச்சராக பஷில் ராஜபக்ஷ பாரமெடுத்துள்ளார்.

அவருடைய ஆளுமையை நன்றாகத் தெரிந்தவன் என்ற வகையிலே இந்த நாட்டிலே ஒரு பொருளாதார மறுமலர்ச்சி விரைவில் ஏற்படுவது நிச்சயமாகும். அதிலும் குறிப்பாக கிராமிய பொருளாதார அபிவிருத்திகளையும் நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்த அவர் தொடங்கி விட்டார்.
நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்து அடுத்த ஒரு மணி நேரத்தில் தனது அமைச்சு அலுவலகத்திற்குச் சென்றவர் நள்ளிரவு வரை பணியாற்றினார் என்பதே ஒரு முன்னுதாரணமாகும்.

பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கின்ற இந்த வேளையிலே சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஏற்கெனவே யுத்தத்திற்கு முகம்கொடுத்து அதிகளவான பாதிப்புக்களைச் சந்தித்து அது மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்ற வேளையிலே தாங்கிக் கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி இருக்கின்ற வேளையிலும் இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை அணுகுவதற்குத் தயங்காமல் இருப்பதுதான் இந்த அரசாங்கத்தின் தைரியமாகும்.

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் பாதைகள் இந்த நாட்டிலே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு, நாட்டில் கிட்டத்தட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் கிராமிய வீட்டுத் திட்டம் பயிர்ச் செய்கைத் திட்டங்கள் என முன்கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த அபிவிருத்தித் திட்டங்களின் பிரதிபயன்கள் உடனடியாகக் கிடைக்கா விட்டாலும் இவை நீடித்து நிலைக்கும் பொருளாதார நன்மைகளாக உள்ளன.” என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment