'நாங்கள் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்' : கொரானா முடக்கத்தால் இரத்தினப்புரியில் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 6, 2021

'நாங்கள் பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்' : கொரானா முடக்கத்தால் இரத்தினப்புரியில் ஆர்ப்பாட்டம்

(நா.தனுஜா)

அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதன் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதேசமொன்றைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் உணவு உள்ளடங்கலாக அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாகவும் தமக்கு உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை என்றும் கூறி, தோட்டத் தொழிலாளர்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு அமைவாக கடந்த காலத்தில் நாடு முழுமையாக முடக்கப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை அரசாங்கத்தினால் எமக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை. எமது பிள்ளைகள் பசியால் வாடுகின்றார்கள். அதன் காரணமாகவே இப்போது இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து எமது கிராமமும் ஒட்டு மொத்த நாடும் மீட்சிபெற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அதற்காக நாங்கள் வாழும் பிரதேசத்தை முடக்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. ஆனால் அவ்வாறு முடக்கப்படும் காலப்பகுதியில் அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய 5,000 ரூபா நிவாரண நிதியைப் பெற்றுக் கொடுத்தால் குறைந்தபட்சம் இரண்டு வேளை உணவை உட்கொண்டு, தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பின்பற்றி வீடுகளுக்குள்ளேயே இருப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி 'நாங்கள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது உயரதிகாரிகளுக்கு எதிராகவோ இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக பசியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் போராட்டத்தில் ஈடுபடுகின்றோம்' என்று குறிப்பிட்ட அவர் 'எனவே இந்தக் காணொளியை இயலுமானவரையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிருங்கள். அதனைப் பார்த்த பின்னரேனும் எமது பிள்ளைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகின்றோம்' என்றும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை நாடளாவிய ரீதியில் புதிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் நடைமுறையிலிருக்கும் நிலையில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கக்கூடாது என்று அறிவுறுத்திய பொலிஸ் அதிகாரியுடன் அப்பகுதி மக்கள் தமது தரப்பு நியாயத்தை விளக்கித் தர்க்கத்தில் ஈடுபட்டமையும் டயர் மற்றும் தென்னோலைகளை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment