தென்னாப்பிரிக்கா கலவரம் : 72 பேர் பலி : நாடு முழுவதும் பதற்றம் : பின்னணி என்ன? - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

தென்னாப்பிரிக்கா கலவரம் : 72 பேர் பலி : நாடு முழுவதும் பதற்றம் : பின்னணி என்ன?

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கைதுக்குப் பிறகு அந்நாட்டில் பரவலாக ஏற்பட்ட கலவரத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு சொவெட்டோ என்ற பகுதியில் உள்ள வணிக அங்காடியை சிலர் சூறையாடியபோது நெரிசலில் மிதிபட்டு இறந்த 10 பேரும் இதில் அடங்குவர்.

ஜேக்கப் ஜூமா கைதுக்கு எதிராக இந்த கலவரம் கடந்த வாரம் தொடங்கியது முதல் நாட்டில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. இதையடுத்து அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையில் காவல்துறைக்கு உதவியாக ராணுவம் அழைக்கப்பட்டிருக்கிறது.

கலவர சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க காவல்துறை, கலவரத்தை தூண்டியதாக 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1,234 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

1990 களுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா எதிர்கொண்ட மோசமான வன்முறை இது என்று ஜனாதிபதி சிறில் ராமஃபோஸா தெரிவித்துள்ளார். 

பல நகரங்களில் பொது இடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டுள்ளன, க்வாஸூலு, கெளடெங் மாகாணங்களில் உள்ள நகரங்களில் பல தொழில் நிறுவனங்கள் மற்றும் கிடங்குகள் சூறையாடப்பட்டுள்ளன.

நாட்டில் இதுபோன்ற சூறையாடல்கள் தொடர்ந்தால் அடிப்படை உணவு விநியோகத்துக்கே தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து அவசரநிலை பிறப்பிக்கும் திட்டத்தை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
நெரிசலில் சிக்கிய குழந்தை
கடைகள் தீ வைக்கப்பட்டதால் மேல் தளத்தில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் ஏணி மூலம் மீட்கப்பட்டனர்.

க்வாஸூலு நாடல் மாகாணத்தில் உள்ள தொழில் மாவட்டமான டர்பனின் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கூட்ட நெரிசலில் ஒரு குழந்தை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சிக்கியிருந்தது.

ஸ்மித் நகரில் கடைகளை சூறையாடிய சிலர் அவற்றுக்கு பின்னர் தீ வைத்தனர். இதனால் கடைகளுக்கு மேலே தீ பரவியபோது மேல் தளத்தில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியே ஓடி வந்தனர்.

இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய தனது குழந்தையை மேலே இருந்தவாறு சாலையில் இருந்தவர்களை நோக்கி அதன் தாய் வீசினார். அதை கீழே இருந்தவர்கள் கூட்டமாக சேர்ந்து பிடித்து காப்பாற்றினர். பின்னர் மற்றவர்கள் ஏணி உதவியுடன் காப்பாற்றப்பட்டனர். பின்னர் தனது தாயுடன் அந்த குழந்தை சேர்ந்தது. இந்த சம்பவம் மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தது. சம்பவ பகுதிக்கு 20 நிமிடங்கள் கழித்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சேதம் எவ்வளவு?
கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் மட்டும் 200 க்கும் அதிகமான கடைகள் சூறையாடப்பட்டதாக தென்னாப்பிரிக்க தொழில்துறை தலைவர்கள் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி புஸிசிவே மாவுசோ கூறினார் என்று ப்ளூம்பெக் செய்தி வெளியிட்டுள்ளது.

சொவெட்டோ நகரில் பல்வேறு வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதுதான் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரம். அதுமட்டுமின்றி தென்னாப்பிரிக்காவின் தந்தையாக போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் சொந்த ஊரும் இதுதான். அங்குள்ள ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்கள் நொறுக்கப்பட்டன, விடுதிகள், மதுபான கடைகள், ஆடையகங்கள் சூறையாடப்பட்டன.

காவல்துறையினருக்கு உதவியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் கலவரக்காரர்கள் சிலரை பிடித்தனர். அங்கு இதுவரை 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தொடரும் கலவர சம்பவங்களை தடுக்கும் அளவுக்கு போதிய எண்ணிக்கையில் படையினர் இல்லை.

க்வாஸூலு நட்டாலில் கால்நடைகளையும் சிலர் திருடிச் சென்றுள்ளனர். கலவரத்துக்குள்ளான பகுதிகளில் தொடர்ந்து அவசரகால ஊர்திகளின் சைரன் ஒலி கேட்டவண்ணம் உள்ளது.

கலவரம் தொடர்பாக நாட்டு மக்களிடம் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமஃபோஸா உரையாற்றிய அதே சமயம், டர்பன் நகரில் உள்ள ரத்த வங்கியை கூட கலவரக்காரர்கள் விட்டு வைக்கவில்லை.
கலவரத்தின் பின்னணி என்ன?
இந்த கலவரத்துக்கு ஒரே மூல காரணம், கடந்த வாரம் கைது நடவடிக்கைக்கு உள்ளான ஜேக்கப் ஜூமா. தங்களால் அரசியல் கதாநாயகனாக போற்றப்படும் ஜூமாவை விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

தென்னாப்பிரிக்காவில் வேலை செய்பவர்களில், குறைந்த வருவாய் ஈட்டும் நிலைமை மற்றும் வேலை வாய்ப்பின்மை விகிதம் இதுவரை இல்லாத வகையில் 32.6 சதவீதமாகவும், அதில் அதிகபட்சமாக இருப்பது 46.3 சதவீத இளைஞர்கள் என்பதும் புள்ளிவிவரம் தரும் செய்தி. இந்த சமூகத்தினர்தான் கலவரம் வெடிக்க காரணமான தீப்பொறிக்கு இலக்கானவர்கள்.

ஜூமாவின் அரசியல் அடிநாத பகுதியாக கருதப்படும் க்வாஸூலு நட்டாலிலும் பொருளாதாக முகமையாக கருதப்படும் கெளடெங்கிலும் இந்த கலவரத்தின் தாக்கம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் நிலைகுலைய வைத்துள்ளது.

பலரும் ஜேக்கப் ஜூமாவுக்குப் பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதி சிறில் ராமஃபோஸா, தீர்க்கமான முடிவை எடுப்பதில் தோல்வி அடைந்து விட்டார் என்று கருதுகின்றனர். ஜூமாவின் கைதுக்குப் பிறகு கோபாவேசத்துடன் திரண்டவர்களை அமைதிப்படுத்துவதிலும் தென்னாப்பிரிக்கர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அவர் தோல்வி அடைந்து விட்டதாக இங்கே பேசுகிறார்கள்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கொரோனா முழு முடக்கத்தை அமல்படுத்த 70 ஆயிரம் ராணுவத்தினரை களமிறக்கிய ஊரடங்கை நிலைநாட்டிய சிறில் ராமஃபோஸா, தற்போது கலவரம் தீவிரம் அடைந்த பிறகே வெறும் 2,500 ராணுவத்தினரை தாமதமாக அனுப்ப உத்தரவிட்டதாகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

ஆனால், ராணுவத்தினரை அமைதிப்பணியில் ஈடுபடுத்தும் விஷயத்தில் எதிர்கட்சியினருடன் ஆலோசிக்காத அவரது நடவடிக்கையை பொருளாதார சுதந்திர போராளிகள் கட்சி கண்டித்துள்ளது. இதுபோன்ற விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என்று எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.
வன்முறையைத் தூண்டிய நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது
கலவரம் பாதித்த பகுதிகளில் குடியிருப்பு வாசிகள் பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் உள்ளூர்வாசிகளே பாதுகாப்பு படை என்ற பெயரில் ஒரு தற்காப்புக் குழுவை உருவாக்கிக் கொண்டு தங்களுடைய பகுதிகள் தீக்கிரையாகாமலும் கொள்ளைடிக்கப்படாமல் தடுக்க முயற்சி எடுத்துள்ளனர்.

தற்போதைய அமைதியற்ற நிலைமை, தென்னாப்பிரி்க்காவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவாலான ஒன்றாக கருதப்படுகிறது. அந்நாட்டின் ஜனாதிபதியாக  சிறில் ராமஃபோஸா 2018 இல் பதவிக்கு வந்த பிறகு ஏற்படும் மிக மோசமான சட்டம் ஒழுங்கு பிரச்னையாக இது கருதப்படுகிறது. 

ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்றால் தாக்கத்தை அனுபவித்து வரும் தென்னாப்பிரிக்காவில் தற்போதைய கலவரம் தொடர்ந்தால் அது நாட்டின் பொருளாதாரத்துக்கும் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
ஜூமா சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?
தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக  பதவி வகித்த காலத்தில் ஊழல் செய்ததாக ஜேக்கப் ஜூமா மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டது. அந்த குற்றத்துக்காக அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் புதன்கிழமை ஜேக்கப் ஜூமா காவல்துறையிடம் சரண் அடைந்த பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனக்கு எதிரான தண்டனை, அரசியலமைப்பு நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு ரத்து செய்யப்படும் அல்லது குறைக்கப்படலாம் என்று 79 வயதாகும் ஜேக்கப் ஜூமா எதிர்பார்க்கிறார். எனினும், அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று அந்நாட்டின் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad