தெஹிவளை மிருககாட்சிசாலையில் மற்றொரு சிங்கத்திற்கும் கொரோனா..! பொறுப்பற்ற வகையில் செயற்படும் நிர்வாக அதிகாரிகள் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

தெஹிவளை மிருககாட்சிசாலையில் மற்றொரு சிங்கத்திற்கும் கொரோனா..! பொறுப்பற்ற வகையில் செயற்படும் நிர்வாக அதிகாரிகள்

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் தெஹிவளை தேசிய மிருககாட்சிசாலையில் மற்றொரு சிங்கத்திற்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 18 ஆம் திகதி இம்மிருககாட்சிசாலையில் தோர் என்ற சிங்கத்திற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் இருப்பிடத்திலேயே உள்ள ஷீனா என்ற 12 வயதுடைய பெண் சிங்கத்திற்கே இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய மிருககாட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தோர் என்ற சிங்கத்திற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் அங்குள்ள ஏனைய விலங்குகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தற்போது மற்றொரு சிங்கத்திற்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

விலங்குகளை இவ்வாறான தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு காணப்படுகின்றது. அவ்வாறிருந்தும் இவ்வாறு விலங்குகள் தொற்றுக்கு உள்ளாவது கவலைக்குரியதாகும் என அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் நுவன் ஹேவாகமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வனஜீவராசிகள் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற கால்நடை வைத்தியர் அதிகாரிகளால் விலங்குகளை தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆனால் அந்த ஆலோசனைகள் எவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் தெஹிவளை மிருககாட்சிசாலையின் நிர்வாக அதிகாரிகள் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்றனர். இந்த பொறுப்பற்ற செயற்பாடுகளின் பிரதிபலிப்பாகவே தற்போது சிங்கங்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு கொவிட் தொற்று ஏற்படுத்தப்பட்டுள்ள என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆய்வு கூடம் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தில் காணப்படுகிறது. 

ஆனால் இந்த ஆய்வு கூடத்திற்கு மாதிரிகளை அனுப்புவதை வனஜீவராசிகள் திணைக்களம் இடை நிறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு இது குறித்த தகவல்கள் வெளியிடப்படுவதை தவிர்ப்பதற்கே அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment