எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தாமதமடைந்தது : இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தாமதமடைந்தது : இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சீனாவிடமிருந்து தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு முற்பட்டபோது, எதிர்க்கட்சியினர் அதற்குப் பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தாமதமடைந்தது. இந்நிலையில் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாட்டில் நூற்றுக்கு எழுபது சதவீதமானோருக்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஐந்து மேம்பாலங்களின் நிர்மாணப்பணிகள் இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் வைத்து இணைய வழியின் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா கூறியதாவது, வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளின் நிதியுதவியுடனேயே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவற்றை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில், அதனை மக்களின் நிதியூடாகவே மீளச் செலுத்த வேண்டிய நிலையேற்படும். ஆகவேதான் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காணப்பட்டாலும் கூட, இந்த செயற்திட்டத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்துபோது 'மகிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழேயே நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தாமதப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டங்களைத் தற்போது தொடர்ந்து முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.

அரசாங்கம் தொடர்பில் எதிர்க்கட்சியினரால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாம் சீனாவிடமிருந்து சைனோபாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு முற்பட்டபோது, அதற்கு எதிராகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

சைனோபாம் தடுப்பூசிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனை உட்செலுத்துவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்கள். எனினும் கொவிட்-19 தடுப்பூசிகளில் சீனாவின் உற்பத்தியான சைனோபாம் தடுப்பூசி மிகச்சிறந்ததாகும் என்று தற்போது அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. 

எனவே எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகளின் காரணமாகவே எமது நாட்டிற்குத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. இன்னும் இரு மாத காலத்திற்குள் நாட்டில் நூற்றுக்கு எழுபது சதவீதமானோருக்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad