காலைக்கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது தாக்குதல் : புன்னாலைக்கட்டுவன், கப்பன்புலவு வீடுகளுக்கு மலசலகூடங்கள் இல்லாமையால் வந்த வினை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

காலைக்கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது தாக்குதல் : புன்னாலைக்கட்டுவன், கப்பன்புலவு வீடுகளுக்கு மலசலகூடங்கள் இல்லாமையால் வந்த வினை

காலைக் கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது இராணுவத்தினர் கேபிளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு கப்பன்புலவு பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீதே நேற்றுமுன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு கப்பன் புலவு பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்கள் மலசலகூட வசதிகள் அற்ற நிலையில் வசித்து வருகின்றோம். இது குறித்து பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். 

பல நன்கொடையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிடமும் மலசலகூடங்களை கட்டிதருமாறு கோரியுள்ளோம். ஆனால் இதுவரை எமக்கு எவரும் கட்டித் தர நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 10 குடும்பங்களும் வீடுகளுக்கு சற்று தொலைவில் உள்ள பனங்காணிக்கு சென்றே காலை கடன்களை முடிக்கிறோம். இதனால் பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றோம். 

இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளுக்கு முகம் கொடுத்தால் அந்த காணிக்கு செல்வதற்கு அச்சம் காரணமாக பலரும் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளனர்.

இதேவேளை காலைக் கடன்களை அதிகாலையில் முடித்து விட்டு திரும்ப வேண்டிய நிலையில் உள்ளோம். சற்று வெளிச்சம் வந்தாலும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் காணப்படும். அதனால் காலை கடனை முடிக்க முடியாத நிலைக்கு உள்ளாவோம்.

வீடுகளுக்கு மலசல கூடங்கள் இல்லாமையால், பல சிரமங்களுடனேயே வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலைக் கடனை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, வீட்டுக்கு அருகில் இராணுவத்தினர் என்னை வழிமறித்து பயணத்தடை அமுலில் உள்ள நேரம் எங்கே சென்று வருகின்றாய் என விசாரித்தனர்.

அதன் போது நான், காலைக் கடனை முடித்து விட்டு வருகிறேன் என அவர்களுக்கு விளக்கம் சொல்ல முற்பட்ட போது எனக்கு பின்னால் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கேபிள் கம்பியால், தாக்கி "ஓடு, ஓடு " என விரட்டினார் என தெரிவித்தார்.

(யாழ்.விசேட நிருபர்)

No comments:

Post a Comment