பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும் காலத்தை நீடியுங்கள் : அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ள பெப்ரல் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும் காலத்தை நீடியுங்கள் : அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ள பெப்ரல் அமைப்பு

(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பொதுமக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்ளும் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாரச்சி தேர்தல் முறைமையில் திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்தல் மற்றும் வாக்களிப்பு கட்டமைப்பு சட்ட திட்டங்களில் திருத்தங்கள் தொடர்பில் தேடிப்பார்த்து திருத்தங்களை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக மக்களால் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், காலத்தின் தேவையை கருதி தற்போது அது அமைக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த தெரிவுக் குழுவுக்கு தேர்தல் முறைமையில் திருத்தங்களை எதிர்பார்க்கும் அமைப்புகள் அல்லது நபர்கள் அவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்காக 2021 ஜூன் 19ஆம் திகதி வரை காலவரையறை வழங்கப்பட்டிருக்கின்றபோதும், கொரோனா தொற்று நிலைமை காரணமாக இது தொடர்பாக மக்கள் போதுமானளவு கவனம் செலுத்துவார்களா? என்பது சந்தேகமான நிலைமையாகவே காணப்படுகின்றது.

அதனால் இயன்றளவு மக்களின் அபிலாஷைகள் பிரதிநிதித்துவப்படும் வகையில் தேர்தல் முறைமை ஒன்றை உருவாக்குவதாக இருந்தால், அதற்காக தெளிவான மனதுடன் கருத்தாடல்களை மேற்கொள்வதற்கும் அந்த கருத்தாடல்கள் ஊடாக மிகவும் மேம்பட்ட அம்சங்கள் அடங்கிய தேர்தல் முறைமை ஒன்றை தயாரித்துக்கொள்ள போதுமான காலம் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

என்றாலும் கொரோனா தொற்று மிகவும் துரதிஷ்டவசமான முறையில், அனைத்து வகையான முதன்மை விடயங்களையும் பிற்படுத்திவிட்டு, தங்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளும் போராட்டத்திற்கு மக்களின் வாழ்க்கையை இட்டுச் சென்றிருக்கின்றது.

இலங்கையில் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு என்ற வகையில், மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இதற்கு முன்பு மேற்கொண்ட வகையில் பிரஜைகளின் ஆலோசனைகளை தெரிவுக் குழுவுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு, இந்த தொற்று நிலைமை பெரும் தடையாக இருக்கின்றது.

இவ்வாறான மிகவும் மோசமான உலகளாவிய தொற்று நோய் நிலைமையில், எமக்கு மாத்திரமல்ல, இது தொடர்பில் ஆர்வம் காட்டிவரும் அனைத்து அமைப்புகளுக்கும் பாரிய சவாலாகும்.

எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, கொரோனா தொற்று நோய் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வரும்வரை, தேர்தல் முறை திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டை பிற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்ய முடியாது எனில், பிரஜைகளுக்கு போதுமான நியாயமான கால வரையறையொன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உங்கள் தலைமையிலான தெரிவுக்குழு கவனம் செலுத்தவேண்டும் என ரோஹண ஹெட்டியாரச்சி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment