குருணாகல் பொலிஸ் நிலையத்துக்குள் நகர மேயரின் பிறந்த நாள் கொண்டாட்டம் : ஊடகவியலாளர் விசாரணைகளுக்கு அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 10, 2021

குருணாகல் பொலிஸ் நிலையத்துக்குள் நகர மேயரின் பிறந்த நாள் கொண்டாட்டம் : ஊடகவியலாளர் விசாரணைகளுக்கு அழைப்பு

(எம்.எப்.எம்.பஸீர்)

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், குருணாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, குருணாகல் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடிய போது, அந்நிகழ்வை வீடியோ எடுத்ததாக கூறப்படும் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸ் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நிரோஷன் ஜயதிஸ்ஸ எனும் ஊடகவியலாளரே, குறித்த பிறந்தநாள் விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு விஷேட பொலிஸ் குழுவினரால் அழைக்கப்பட்டுள்ளதக அறிய முடிகிறது.

குறித்த பிறந்தநாள் களியாட்டம் தொடர்பில் விமர்சனக்கள் ஏற்பட்ட நிலையில் இந்த விடயம் குறித்து பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலான குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் ஒரு அங்கமாகவே வாக்கு மூலம் பெற குறித்த ஊடகவியலாளர் அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும் இது குறித்து விசாரிக்கும் பொலிஸ் குழு இதுவரை, மேயரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யவில்லை. மேயர் துஷாரவும் அவரது மனைவியும் குறித்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருவதாகவும் அதனால் அவர்களிடம் இதுவரை வாக்கு மூலம் பெற முடியவில்லை எனவும் பொலிஸ் தரப்பு கூறுகிறது.

எவ்வாறாயினும் குறித்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சர் சமன் திஸாநாயக்கவை அங்கிருந்து உடனடியாக குளியாபிட்டியவுக்கு இடமாற்றப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெருகின்றன.

குருணாகல் பொலிஸ் நிலையத்தில் கடந்த மே 30 ஆம் திகதி விஷேட பிரித் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா தொற்றினை ஒழிக்க முன்னெடுக்கும் பிரார்த்தனையாக அது அமைந்திருந்தது. அதற்காக மட்டுமே அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

அந்த பிரித் நிகழ்வின் இறுதியேலேயே நகர மேயருக்கு பொலிஸ் நிலையத்துக்குள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இதில் பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

No comments:

Post a Comment