தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டுக்குள் பாரிய அளவிலான டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது : தயாசிறி ஜெயசேகர - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டுக்குள் பாரிய அளவிலான டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது : தயாசிறி ஜெயசேகர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நீண்ட காலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அல்ல, ஆனால் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போனால் 2 பில்லியன் டொலர் பறிபோகும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் எரிபொருள் நெருக்கடி என்பது எமது நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகமும் இந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

எமது அரசாங்கமும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் தற்போது குறைநிரப்பு பிரேரணை ஒன்றினை சமர்பித்துள்ளோம்.

கொவிட் நிலைமைகளை கையாளவே நாம் இந்த குறைநிரப்பு பிரேரணையை முன்வைத்துள்ளோம். ஆரம்பத்தில் நாட்டின் வரிகள் குறைக்கப்பட்டன, புதிய வியாபாரங்கள் பல உருவாகும் என்ற நம்பிக்கையில் அதனை செய்தார், ஆனால் கொரோனா காரணமாக எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இதனால் 600 பில்லியன் எமக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே மீண்டும் வரிகளை கூட்டுவதால் நிலைமைகளை சரி செய்ய முடியாது. நாட்டுக்குள் பாரிய அளவிலான டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஒன்பது மாதங்களுக்கான சீனி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இவ்வாறு நடந்ததில்லை. இது தொடர்ந்தால் பாரிய பொருளாதார நெருக்கடி உருவாகும். அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் இல்லாது போகும் நிலையொன்றும் உருவாகியுள்ளது. இதனால் 2 பில்லியன் டொலர் இல்லாது போகும். ஆகவே இதனை தக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்தோம். எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நபர்களை விடுவிக்க வேண்டும் என நாம் பேசினோம். ஏற்கனவே 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதேபோல் இப்போதுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக அல்ல. அவர்கள் நீண்ட காலமாக சிறைகளில் இருந்து கஷ்டப்பட்டுள்ளனர். இது அவர்களின் மனித உரிமையை பறிக்கும் செயற்பாடு என்றே நான் கருதுகின்றேன். எனவே அவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment