தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் - கோவிந்தன் கருணாகரன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் - கோவிந்தன் கருணாகரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நீண்ட காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக சிறிய தவறுகளில், முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு பரிசீலனை செய்வதை விடவும் முற்றுமுழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறிய விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கின்றது. ஆனால் இந்த விடயத்தை 2009 ஆம் ஆண்டில் செய்திருக்க வேண்டும். அப்போது 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வு வழங்கி விடுவித்ததாகவும், மூவாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்கியதாகவும் கூறினீர்கள், அப்படியென்றால் சில நூறு பேரை ஏன் 30-40 ஆண்டுகளாக தடுத்து வைத்தீர்கள். இது குறித்து நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும். 

இன்று ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போகின்றமை, அமெரிக்க காங்கிரஸில் அறிக்கை என்பவற்றை வைத்துக் கொண்டு சர்வதேச அழுத்தம் வருகின்ற வேளையில் இதனை செய்ய முயற்சிக்கின்றீர்கள். எவ்வாறு இருப்பினும் காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது. எனவே அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

நீண்ட காலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக சிறிய தவறுகளில், முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும்.

அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு பரிசீலனை செய்வதை விடவும் முற்றுமுழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டிற்கு சுபீட்சம் ஏற்படும். 

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தினால் நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

இறுதியாக 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் ஒத்துழைப்பில் தானே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது. அன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிய நாடுகள் இன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற காரணத்தினால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment