நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை : முதலீடு என்ற பெயரில் கொழும்பிலுள்ள கட்டடங்களை விற்பனை செய்ய முயற்சி - ஹர்ஷடி சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை : முதலீடு என்ற பெயரில் கொழும்பிலுள்ள கட்டடங்களை விற்பனை செய்ய முயற்சி - ஹர்ஷடி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் கொழும்பில் இருக்கும் கட்டிடங்களை விற்பனை செய்து பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரச சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் சில கட்டிடங்களை முதலீடு செய்வது என்ற பெயரில் அரசாங்கம் விற்பனை செய்ய எடுத்து வரும் முயற்சி தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் இருந்து கடன் பெறுவதில்லை. மாறாக முதலீட்டாளர்களை நாட்டுக்கு கொண்டுவருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனால் கொழும்பில் இருக்கும் வெளிவிவகார அமைச்சு கட்டிடத்தை பங்குச் சந்தைக்கு விற்பனை செய்வது அல்லது தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதாகவே அது தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாருக்கு விற்பனை செய்தாலும் இடம்பெறுவது விற்பனையாகும். 49 வீதம் விற்பனை செய்வதாகவே அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. கொழும்பு 1 இல் அமைந்திருக்கும் வெளிவிவகார அமைச்சு இருக்கும் கட்டிடத்தையே விற்கப் போகின்றனர். இதனை விற்கப் போவதில்லை என முடியுமானால் தெரிவிக்கட்டும். 

குறித்த கட்டிடத்தை முதலீட்டு இலாவாக பெயரிட்டு, அதற்கு தபால் தலைமையக கட்டிடம், யோர்க் கட்டிடம் மற்றும் கபூர் கட்டிடம் என்பவற்றையும் இணைத்துக் கொண்டு, அதற்கு எஸ்.பி.வி. என கம்பனி ஒன்றையும் அமைத்து, அதற்கு ஏதாவது பெயர் ஒன்றையும் பிரயோகித்து, அந்த கட்டிடத்தையே விற்கப்போகின்றனர்.

அத்துடன் இந்த கட்டிடங்களை யாருக்கு விற்கப்போகின்றனர் என எங்களுக்கு தெரியாது. தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் எந்த நாடுகளில் இருந்து வருகின்றார்கள் என அவர்களுக்குத்தான் தெரியும். சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்த முறைக்கமையவே இந்த விடயமும் இடம்பெறுவதாக அரசாங்கத்தில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தை இதனுடன் ஒப்பிட முடியாது. சிங்கப்பூர் அரசாங்கம் செயற்படுவதுபோல் எமது அரசாங்கம் செயற்படுவதில்லை. அங்கு திருடர்கள், தரகர்கள் இல்லை. மிகவும் வெளிப்படையாகவே அவர்கள் செய்கின்றார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறு அல்ல, இந்த வேலைத்திட்டத்துக்குள் யாராவது மோசடி காரர் புகுந்து, அதில் வரும் வருமானத்தை தங்களுக்கு பெற்றுக் கொள்ளவே முயற்சிப்பார்கள்.

எனவே நாட்டு பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளும் பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றன. எந்த பக்கத்தால் இந்த பிரச்சினையில் இருந்து வெளிவருவது என தெரியாது. அதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே கொழும்பில் இருக்கும் இந்த பழைமை வாய்ந்த கட்டிடங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது. என்றாலும் அரச கட்டிடங்களை விற்பதன் மூலம் ஒருபோதும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.

No comments:

Post a Comment