மீண்டும் வருகிறது ஒலியைவிட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானம் - News View

Breaking

Post Top Ad

Saturday, June 5, 2021

மீண்டும் வருகிறது ஒலியைவிட வேகமாக செல்லும் சூப்பர் சோனிக் விமானம்

அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் என்கிற விமான நிறுவனம் 15 புதிய சூப்பர் சோனிக் (ஒலியை விட கூடுதல் வேகம்) பயணிகள் விமானங்களுக்கு ஒடர் கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. 2029ஆம் ஆண்டில் மீண்டும் ஒலி வேக விமானப் பயணத்தை அறிமுகப்படுத்தவும் தீர்மானித்திருக்கிறது அந்த நிறுவனம்.

கடந்த 2003ஆம் ஆண்டு, ஏர் பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனங்களிருந்து கான்கார்ட் என்கிற சூப்பர் சோனிக் விமானம் ஓய்வுபெற்ற போது, சூப்பர் சோனிக் பயணிகள் விமானங்களின் சகப்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

புதிய ஓவர்ச்சர் (Overture) விமானத்தை பூம் என்கிற டென்வர் நகரத்தைச் சேர்ந்த நிறுவனம் உற்பத்தி செய்யவிருக்கிறது. இதுவரை இந்த விமானம் ஒலி வேகத்தில் ஓட்டி சோதிக்கப்படவில்லை.

இந்த புதிய விமானம் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என யுனைடெட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூப்பர்சோனிக் விமானம் என்றால் என்ன?
ஒரு விமானம் ஒலியை விட வேகமாக பயணித்தால் அதை சூப்பர் சோனிக் விமானம் என்கிறோம். 60,000 அடி உயரத்தில் மணிக்கு 1,060 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க வேண்டும்.

பொதுவாக பயணிகள் விமானங்கள் மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில்தான் பறக்கும். ஆனால் ஓவர்ச்சர் மணிக்கு 1,805 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேகத்தில் பறந்தால், லண்டன் - நியூயார்க் இடையிலான பறக்கும் நேரத்தை பாதியாகக் குறைக்கலாம். ஓவர்ச்சர் விமானத்தில் இந்த வழித்தடத்தை 3.5 மணி நேரத்தில் பயணித்துக் கடக்கலாம். பயண நேரத்தில் 3 மணி நேரத்தை குறைக்கலாம் என்கிறது பூம் நிறுவனம்.

1976 இல் பயணிகள் விமான சேவையில் நுழைந்த கான்கார்ட் விமானம் மணிக்கு 2,180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியதாக இருந்தது.

இதில் உள்ள சவால்கள் என்ன?
இந்த சூப்பர் சோனிக் விமானப் பயணங்களில் இரு பெரும் பிரச்சனைகள் இருக்கின்றன. இரைச்சல் மற்றும் மாசுபாடு.

ஒலியை விட வேகமாக பறக்கும் போது, விமானம் சோனிக் பூம் எனப்படும் பேரொலியை ஏற்படுத்தும். தரையில் இருப்பவர்களுக்கு அது ஏதோ இடி இடிப்பது போலவோ, பெரிய வெடிச்சத்தம் போலவோ கேட்கும்.

சூப்பர் சோனிக் விமானங்கள் எங்கு பறக்கலாம் என்பதை பூம் நிறுவனம் வரையறுக்கிறது. இவ்விமானங்கள் கடல் பகுதியை அடையும் வரை, மக்களிடமிருந்து தொலைவாக செல்லும் வரை குறைந்த வேகத்தில் பறக்க வேண்டும் என்கிறார்கள்.

சூப்பர் சோனிக் விமானங்கள் பறக்கத் தொடங்கும் போதும், தரையிறங்கும் போதும் தற்போது நடைமுறையில் இருக்கும் நவீனகால பயணிகள் விமானங்களை விட அதிக ஒலியை எழுப்பாது என நம்புவதாக பூம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 

விமானத்தின் வடிவமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சோனிக் பூம் சத்தத்தையும் குறைக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது பூம் நிறுவனம்.

அடுத்த பெரிய பிரச்சனை எரிபொருள் நுகர்வு "சூப்பர் சோனிக் வேகத்தில் பறக்க வேண்டும் என்றால், அதிக சக்தி தேவை. அதற்கு அதிக எரிபொருள் தேவை" என பிபிசியிடம் கூறுகிறார் பூம் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி கேத்தி சவிட்.

ஓவர்ச்சர் "நிகர பூஜ்ஜிய கார்பன் விமானமாக" பறக்கும் என தான் எதிர்பார்ப்பதாகக் கூறுகிறார் கேத்தி.

சூப்பர் சோனிக் - நீடித்த நிலைத்த தொழில்நுட்பமா?
ஓவர்ச்சர் விமானத்தை முழுமையாக நிலையான புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளில் இயக்க பூம் திட்டமிட்டிருக்கிறது.

விவசாயத்துறை கழிவுகளாக இருக்கும் விலங்குகளின் கொழுப்பு முதல் எரிபொருளுக்காகவே பிரத்யேகமாக வளர்க்கும் பயிர்கள் வரை பயன்படுத்தி எரிபொருளைத் தயாரிக்கலாம். இது பாஷ் பயோடீசல் வடிவத்தில் இருக்கும் என விளக்குகிறார் க்ரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் விமான மற்றும் சுற்றுச்சூழல் துறை துணைப் பேராசிரியர் முனைவர் கை க்ராட்டன்.

"ஒட்டு மொத்த விமான துறைக்கும் தேவையான பயோ டீசலைத் தயாரிப்பதற்கு தேவையான உற்பத்தி திறன் வசதிகளில் உலகம் மிகவும் பின் தங்கி இருக்கிறது." இது ஒரு பெரிய பிரச்சனை என கூறுகிறார் அவர்.

காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் திரவ எரிபொருள் தயாரிக்கும் முறை இந்தப் பற்றாக்குறையை சரிகட்டும் என கணிக்கிறது பூம்.

"அந்த செயல்முறை எங்கள் தேவைக்கு பயன்படுத்தப்படுவதற்கு முன்பே முழுமையாக வணிகமயமாக்கப்பட்டு விட வேண்டும்" என விளக்குகிறார் பூம் நிறுவனத்தின் ரேமண்ட் ரஸ்ஸல்.

"திடீரென மலிவு விலையில் அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க மின்சார விநியோகத்தை கண்டு பிடிக்க முடியுமா?" என முனைவர் க்ராட்டன் கேள்வி எழுப்புகிறார்.

"இது முற்றிலும் செய்ய முடியாது என நான் கூறவில்லை. இதை சிறப்பாகச் செய்யலாம். ஆனால் இதுவரை இது செய்யப்படவில்லை" என்கிறார்.

சூப்பர் சோனிக் பயணத்துக்கான தேவை இருக்கிறதா?
கான்கார்ட் விமான சேவையின் கடைசி காலங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அதன் செயல்பாடுகள் லாபகரமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.

கான்கார்டில் பயணிப்பது ஒரு சொகுசான பயணமாகக் கருதப்பட்டது. சாதாரண விமானங்களில் முதல் வகுப்பை விட கான்கார்ட்டில் பயணிக்க அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது.

இன்று பணக்காரர்கள், தனி விமானங்களை விரும்புகிறார்கள் என கூறுகிறார் முனைவர் க்ராட்டன்.

சாதாரண வணிக ரீதியிலான விமானங்களில் பொதுமக்களோடு மக்களாக முதல் வகுப்பில் பயணிப்பதற்கு பதிலாக, வியாபாரிகள் மற்றும் பணக்கரர்கள் தங்கள் தேவைக்கு தகுந்தாற் போல, தங்களுக்கு விருப்பமான விமான நிலையங்களுக்கு பறக்க சார்டர் விமானங்களை விரும்புகிறார்கள்.

விமான நிலையங்களில் செக் இன், பரிசோதனைகள், பயண சாமான்கள் போன்ற விஷயங்களைத் தவிர்ப்பதும் பயண நேரத்தை குறைக்கிறது.

பயணிகள் வேகத்தை விரும்புவதாகவும், அதிவிரைவு விமானங்கள் மனிதர்களுக்கு மத்தியிலான இணைப்பை ஆழப்படுத்தும் எனவும், வியாபார ரீதியிலான உறவை வலுப்படுத்தும் எனவும், பூம் நிறுவனத்தின் ஆய்வு கூறுவதாக சவிட் கூறினார்.

ஓவர்ச்சரின் பயணக் கட்டணத்தை வழக்கமான பிசினஸ் வகுப்பு கட்டணம் அளவுக்கு வசூலித்தால்கூட லாபம் கிடைக்கும் என பூம் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இருப்பினும், விமான கட்டணத்தை தீர்மானிக்கப் போவது யுனைடெட் விமான சேவை நிறுவனம்தான். அந்நிறுவனம் ஒரு விமானத்துக்கு 200 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்கிறது, அதற்கான லாபத்தை பார்க்க விரும்புகிறது.

பயணிகள் விமான சேவையில் 1976 ஆம் ஆண்டு நுழைந்த கான்கார்டு சூப்பர் சோனிக் விமானங்கள், 2003 ஆம் ஆண்டு தரையிறக்கப்பட்டன. 

நடைமுறை சிக்கல் மற்றும் விபத்துகளைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு அனைத்து கான்கார்டு விமானங்களுக்கும் ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஓய்வு கொடுத்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அத்தகைய விமானங்களை இயக்குவதற்கான பணிகளை யுனைடெட் ஏர்லைன்ஸ் தொடங்கி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad