இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கூட்டாக இணைந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கூட்டாக இணைந்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படாமை, அதன் பின்னரும் அதிருப்தியளிக்கும் விதமான சம்பவங்கள் தொடர்கின்றமை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கான புதிய நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கூட்டாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்டனேக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான கூட்டறிக்கையொன்றை இன்றையதினம் (புதன்கிழமை) வெளியிட்டிருக்கின்றன.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது போரினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வை வழங்கும் அதேவேளை மனித உரிமைகளையும் மத ரீதியிலான சிறுபான்மையினரையும் பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத அதேவேளை, விசனத்தை ஏற்படுத்தும் வகையிலான மேலும் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கவலையடைகின்றோம்.

இலங்கை அரசாங்கமானது முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்கு விசாரணைகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்கும் அவற்றை முன்னெடுத்துச் சென்றவர்களுக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் முற்பட்டிருக்கிறது. இவை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

அதுமாத்திரமன்றி முன்னாள் குற்றப் புலனாய்வு அதிகாரி ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் அண்மைக் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வரும் முறை தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைந்திருப்பதுடன் நீதிமன்ற மேற்பார்வையின்றி புனர்வாழ்வளிக்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியும் விசனமளிக்கின்றது.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீம் ஆகியோர் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் சிறுபான்மையின சமூகத்தினர் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை இலக்கு வைத்து இச்சட்டத்தின் கீழ் கைது செய்யும் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக 'நினைவு கூருதல்' தொடர்பில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் பெரிதும் கவலையளிக்கின்றன. அத்தோடு அண்மையில் பொலிஸ் காவலின் கீழிருந்தபோது இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்றதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து வலியுறுத்துகின்றோம்.

மேலும் அண்மையில் இடம்பெற்றிருக்கும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கான நியமனங்கள் கவலையளிக்கும் அதேவேளை நீதியை நிலைநாட்டுவதற்கு உண்மையானதும் சுதந்திரமானதுமான கட்டமைப்பொன்றை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஆகவே 46/1 தீர்மானத்தைப் பொறுத்த வரையில் இலங்கையானது மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று கோருவதுடன் அதற்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment