விளை நிலத்தில் திடீரென்று உருவான பள்ளம் : அச்சமடைந்த மக்கள் - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

விளை நிலத்தில் திடீரென்று உருவான பள்ளம் : அச்சமடைந்த மக்கள்

மெக்ஸிகோவில் விளை நிலத்தில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  விளை நிலத்தில் உருவான பள்ளத்தின் அகலம் இன்னும் சற்று அதிகமாகியிருந்தால் ஒரு வீடு முழுவதையும் விழுங்கியிருக்கும்.

மெக்சிகோ நாட்டின், பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனால் மிகப்பெரிய பள்ளம் தோன்றியது. விண்கலம் தரையில் விழுந்தால் ஏற்படும் பள்ளம் போன்று காணப்பட்டது. சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட பள்ளம் உருவானதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளத்தின் அகலம் இன்னும் சற்று அதிகமாகியிருந்தால், அந்த நிலத்தில் இருந்த ஒரு வீட்டை விழுங்கியிருக்கும். எந்த நேரத்திலும் பள்ளம் பெரிதாகலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

திடீரென நிலம் உள்வாங்கியதால், பூகம்பம் ஏற்படப்போகிறது என்று பயந்த மக்கள் அந்தப் பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர். பள்ளம் விழுவதற்கு முன் இடி இடித்தது போன்ற சத்தம் கேட்டதாக அந்த நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

பின்னர் ஒருவழியாக பயம் விலகிய மக்கள் அந்த பகுதிக்குச் சென்று பள்ளத்தை எச்சரிக்கையுடன் பார்த்தனர். அந்த பள்ளத்தில் நீர் நிரம்பி மிகப்பெரிய கிணறு போன்று காட்சியளிக்கிறது.

குறிப்பிட்ட இடத்துக்குக் கீழே பூமியில் பாறைகள் குறைவாக இருப்பதும், திடீரென நீரோட்டம் ஏற்பட்டாலும் இப்படி பள்ளம் தோன்றும் என்று புவியியல் ஆய்வளர்கள் தெரிவித்துள்ளனர். சிங்க்ஹோல் என்று அழைக்கப்படும் இந்த பள்ளமானது, பூமியின் மேற்பாறைகளை நீரோட்டம் கரைப்பதால் ஏற்படுவதாகும்.

கடந்த சனிக்கிழமை தோன்றிய இந்தப் பள்ளம் தொடர்ந்து விரிவடைந்து 80 மீற்றர் அகலம் வரை பெரிதாகியுள்ளது. இந்த பள்ளம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால் அருகில் இருக்கும் விடுகளை விழுங்கிவிடும் அச்சம் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad