யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததைப்போன்று கொவிட் பரவலையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்துவோம் : இன்று நல்லாட்சி ஆட்சியில் இருந்திருந்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கும் - இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததைப்போன்று கொவிட் பரவலையும் வெற்றிகரமாக கட்டுப்படுத்துவோம் : இன்று நல்லாட்சி ஆட்சியில் இருந்திருந்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கும் - இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா

(எம்.மனோசித்ரா)

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள வயதெல்லைக்குட்பட்ட சகலருக்கும் இவ்வருட இறுதிக்குள் தடுப்பூசி வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். 30 வருட கால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியாது என எதிர்த்தரப்பினரால் விமர்சிக்கப்பட்ட போதிலும் அதனை எம்மால் வெற்றி கொள்ள முடிந்தது. அதேபோன்று கொவிட் பரவலும் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்படும் என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த 

அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சியினரால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கள் மற்றும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை கொவிட் கட்டுப்படுத்தலுக்கு மிக அத்தியாவசியமானவையாகும்.

கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதற்காக முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுகாதார சேவையின் வெற்றியாகும். 

தடுப்பூசி வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் எதிர்க்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் அவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வரையறுக்கப்பட்டுள்ள வயதெல்லைக்குட்பட்ட சகலருக்கும் இவ்வருட இறுதிக்குள் தடுப்பூசி வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.

கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பவற்றையே எதிர்க்கட்சி தற்போது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விமர்சிக்கின்றனர்.

இன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் முழு நாடும் பாதிக்கப்பட்டிருக்கும். கொவிட் கட்டுப்படுத்தலுக்காக சுகாதார தரப்பினர், முப்படையினர், பொலிஸ் உள்ளிட்ட தரப்பினர் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றமையை மதிக்க வேண்டும்.

கொவிட் பரவல் ஆரம்பித்த நாள் முதல் அது முழு நாட்டிலும் பரவி பொருளாதாரம் பலவீனமடைய வேண்டும் என்பதே எதிர்க்கட்சியினரின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. எனவே அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை விமர்சித்தது மாத்திரமன்றி, மக்கள் மத்தியில் போலியான பிரசாரங்களையும் பரப்பினர்.

யுத்தம் இடம்பெற்ற போதும் எதிர்க்கட்சியாக இருந்த இவர்கள் அதனை வெற்றி கொள்ள முடியாது என்று கூறினார்கள். எனினும் 30 வருட கால யுத்தத்தை நிறைவு செய்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட எம்மால் முடிந்தது.

இன்று முழு உலகமும் எதிர்கொண்டுள்ள சவாலுக்கு மத்தியில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றார்.

No comments:

Post a Comment