பாடசாலைகளை மீளத் திறக்கும் திகதியை குறிப்பிட முடியாது : செயற்பாட்டிலுள்ள தொலைநோக்கு கல்வியினை விரிவுபடுத்த தீர்மானம் : மாணவர்களின் எதிர்காலத்திற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு பிரதானம் - அமைச்சர் ஜி.எல் பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, June 7, 2021

பாடசாலைகளை மீளத் திறக்கும் திகதியை குறிப்பிட முடியாது : செயற்பாட்டிலுள்ள தொலைநோக்கு கல்வியினை விரிவுபடுத்த தீர்மானம் : மாணவர்களின் எதிர்காலத்திற்கு முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு பிரதானம் - அமைச்சர் ஜி.எல் பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறக்கும் திகதியை தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குறிப்பிட முடியாது. பாடசாலைகளை திறக்கும் விவகாரத்தில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தற்போது செயற்பாட்டில் உள்ள தொலைநோக்கு கல்வி முறைமையினை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுபீட்சமான இலக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலைகளை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் தற்போது நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரம் உள்ளிட்ட பல நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் முன்பள்ளி ஆசிரியர்கள் சேவையில் ஈடுப்படுகிறார்கள். இவர்கள் பெறும் சம்பளம் குறைவானதாக காணப்பட்டாலும் அவர்கள் ஆற்றும் சேவை அளப்பரியது.

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட 250 ரூபா மேலதிக கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிக்க சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் 25 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்கள் நன்மையடைவார்கள்.

குடும்ப வறுமை காரணமாக பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பிறரின் பாதுகாப்பில் ஒப்படைத்து விட்டு வெளிநாடுகளில் தொழில் புரிகிறார்கள். பிறரது பொறுப்பில் உள்ள பெரும்பாலான பிள்ளைகள் ஏதாவதொரு வழிமுறையில் சிறுவர் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமுள்ளன. சிறுவர் சித்திரவதை குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை திருத்தியமைக்க நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதற்கு கல்வி அமைச்சின் ஊடாக பல ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்ளுக்கு ஆரம்ப கற்றல் எழுத்துக்களை மாத்திரம் கற்றுக் கொடுக்கும் வரையறைக்குள் இருக்கக்கூடாது. பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்படுத்தும் அடித்தளத்தை முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமைய முன்பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு பிரதானமானதாகும்.

கொவிட்-19 தொற்று காரணமாக கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் முழுமையாக இடம்பெறவில்லை. மாணவர்கள் உளவியல் ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

கொவிட்-19 வைரஸ் கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் பாடசாலைகளை மீள திறக்கும் தீர்மானம் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பாடசாலையினை திறக்கும் விவகாரத்தில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொலைநோக்கு கல்வி முறைமை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. குருகெதர மற்றும் இலத்திரணியல் முறைமை ஊடாக தற்போது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தொலைநோக்கு கல்வி முறைமை மாணவர்களுக்கு முழுமையான கற்பித்தலை வழங்கும் என்று குறிப்பிட முடியாது. இருப்பினும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இதனை தவிர்க்கவும் முடியாது.

தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கையினை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாடத்திட்டத்தை முழுமைப்படுத்த தொலைக்காட்சி சேவை ஊடாக கற்பித்தலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment