தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமே ரணிலை பின்னிருந்து வழிநடத்துகின்றதா? : சஜித் நாட்டின் தலைவராவதை எவ்விதத்திலும் விரும்பாத சிலர் இருக்கின்றார்கள் - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமே ரணிலை பின்னிருந்து வழிநடத்துகின்றதா? : சஜித் நாட்டின் தலைவராவதை எவ்விதத்திலும் விரும்பாத சிலர் இருக்கின்றார்கள் - நளின் பண்டார

(நா.தனுஜா)

சஜித் பிரேமதாஸ நாட்டின் தலைவராவதை எவ்விதத்திலும் விரும்பாத சிலர் இருக்கின்றார்கள். அத்தகைய கனவைக் கொண்டிருக்கும் தரப்பினர் எவ்வித நிபந்தனைகளுமின்றி தற்போது ஒன்றிணைந்து கொண்டிருக்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமே ரணில் விக்கிரமசிங்கவைப் பின்னிருந்து வழிநடத்துகின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அவர்கள் மீது மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்துமானால் நாம் எதுவும் கூறமாட்டோம். ஆனால் அவர்களின் தீர்மானங்கள் ஒட்டுமொத்த நாட்டின் மீதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. 

உரத்தை உற்பத்தி செய்வதில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியின் காரணமாக அவசியமான உணவுப் பொருட்களின் உற்பத்தியில் பாதிப்பேற்படும் அதுமாத்திரமன்றி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதால் பொதுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையேற்படும்.

இப்போது மக்களின் கைகளில் பணம் இல்லை. அதேபோன்று வியாபார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய வீழச்சி ஏற்பட்டிருப்பதால் வியாபாரிகளும் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளனர். நாட்டை பாரிய வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.

கேள்வி - ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தருவதையிட்டு ஐக்கிய மக்கள் சக்தி அச்சமடைந்திருக்கிறதா?

பதில் - ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் வருவது தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகேதான் அதிகளவில் கருத்துக்களை வெளியிட்டார். இதுவே எமக்கு இருக்கின்ற பிரச்சினை. 

அரசாங்கம் தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவை அமைச்சரவைக்கு அழைத்து, அவரது உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டிருக்கிறதா என்று எமக்குத் தெரியவில்லை.

இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் எதிர்க்கட்சி இரண்டாகப் பிளவுபடுமென கனவு காண்கிறார்களா என்றும் தெரியவில்லை.

எனவே ரணில் விக்கிரமசிங்கவின் உதவியைப் பெற்று எதிர்க்கட்சியை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இராஜதந்திரத் தொடர்புகளும் அனுபவமும் உடைய ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கம் அதன் பக்கத்தில் இழுத்துக் கொள்ளுமானால், அதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எனினும் அவர் தனியொருவராவார். எதிர்க்கட்சியில் 50 இற்கும் மேற்பட்டோர் இருக்கின்றார்கள். ஆகையினால் எவ்வகையிலும் எதிர்க்கட்சி பலவீனமடையாது. 

மாறாக இங்கு காணப்படுவது வர்க்க வேறுபாட்டுப் பிரச்சினையாகும். வர்க்கப் பிரிவினைகளின் காரணமாக பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே பிரேமதாஸ இந்நாட்டின் தலைவரானார். அவர் பாரிய செல்வாக்கைக் கொண்ட உயர்மட்டக் குடும்பத்திலிருந்து வரவில்லை.

ஆகவே இத்தகைய வர்க்க வேறுபாட்டை முன்னிலைப்படுத்துகின்ற, அதன் காரணமாக சஜித் பிரேமதாஸ நாட்டின் தலைவராவதை எவ்விதத்திலும் விரும்பாத சிலர் இருக்கின்றார்கள்.

ஆகவே அத்தகைய கனவைக் கொண்டிருக்கும் தரப்பினர் எவ்வித நிபந்தனைகளுமின்றி தற்போது ஒன்றிணைந்து கொண்டிருக்கிறார்கள். நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்தானந்த அளுத்கமகேவின் உரையைப் பார்க்கும்போது ரணில் விக்கிரமசிங்கவைப் பின்னிருந்து அரசாங்கம் வழிநடத்துகின்றதா? என்ற சந்தேகமும் எழுகின்றது.

எனினும் நாமனைவரும் சஜித் பிரேமதாஸவுடன் உறுதியாக நிற்கின்றோம். இத்தகைய பிரிவினைகளுக்கு இடமளிக்காமல், எதிர்காலத்திற்குப் பொருத்தமான சிறந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அதற்காக நாம் ஆரம்பித்த அரசியல் பயணத்திலேயே இப்போதும் தளர்வின்றிச் சென்றுகொண்டிருக்கின்றோம். 

சஜித் பிரேமதாஸவைத் தோற்கடிக்கும் நோக்கில் சில தரப்புக்கள் ஒன்றிணையலாம். அவர்களுக்கென்று ஒரு திட்டமும் காணப்படலாம். ஆனால் அது ஒருபோதும் வெற்றியடைக் கூடிய திட்டமாக அமையாது என்பதே எமது கருத்தாகும்.

கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் ராமநாயக்க, நாம் வாழ்வதற்கு வளங்கள் இருக்க வேண்டும் என்றே குறிப்பிட்டார்.

ஆனால் அதற்குத் தேவையான அனைத்து இயற்கை வளங்களும் தற்போது படிப்படியாக அழிந்து கொண்டு வருகின்றன. இன்னும் சில காலங்களில் இருப்பதற்கு நாடு கூட இல்லாத நிலையே ஏற்படும். துறைமுக நகரத்தை சீனாவிடம் கொடுத்து விட்டார்கள். இப்போது கொழும்பில் மிகவும் பெறுமதி வாய்ந்த இடங்களை சீனாவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்குவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment