6 அடி நீளத்துக்கு வளரும் செல்ல பிராணிகளான ராட்சத பல்லிகள் - அபூர்வ தகவல்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

6 அடி நீளத்துக்கு வளரும் செல்ல பிராணிகளான ராட்சத பல்லிகள் - அபூர்வ தகவல்கள்

பல்லிகள் என்றால் பூச்சிகளைதான் சாப்பிடும். ஆனால் இந்த வகை பல்லிகள் சுத்த சைவமாகும். கீரை, பூக்கள், பழங்களே இதன் உணவாகும்.

நமது வீட்டு சுவற்றில் பூச்சியை பிடிக்க செல்லும் பல்லியை பார்த்தாலே போதும் நம்மில் பலருக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டு விடும்.

ஏதோ பல்லி நம்மையே விழுங்க வருவதை போல நினைத்துக் கொண்டு பீதி அடைவோம். குறிப்பாக பல்லி என்றால் பெண்களுக்கு கண்டிப்பாக ஆகவே ஆகாது. சுவற்றில் இருந்து பல்லி தவறி கீழே விழுந்து விட்டால் போதும் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி விடும் பெண்களும் உண்டு.

இப்படி பல்லி என்றாலே பயந்து நடுங்குபவர்களைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் சென்னையில் பல்லிகளை செல்லப் பிராணிகளாக பலர் வளர்த்து வருகிறார்கள்.

என்ன நம்ப முடியவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். இதுபோன்ற வளர்ப்பு பல்லிகளை பற்றி வேளச்சேரியைச் சேர்ந்த விஜய் ஏ.ஆர். மேலும் ஆச்சரியப்படும் விஷயங்களை அள்ளி வீசுகிறார்.

பிறக்கும்போது அரை அடி நீளமாக இருக்கும் வளர்ப்பு பல்லிகள் பின்னர் 6 அடி நீளத்துக்கு வளரும். பல்வேறு வண்ணங்களை கொண்டது. இந்த பல்லிகளை இளம் தலைமுறையினர் பலர் விரும்பி விடுகளில் வளர்க்க தொடங்கி இருக்கிறார்கள். வளர்ப்பு பல்லிகளை பராமரிப்பது தொடர்பாக விஜய் கூறும் தகவல்களால் அவைகள் மீது நமக்கே பாசம் ஏற்படுகிறது.

முட்டையில் இருந்து பொறித்து குட்டியாக வெளியே வந்த பின்னர் பல்லிகளை குழந்தைகளை போல பராமரிக்கும் விஜய் ஒரு மாதத்துக்கு பிறகு அதனை விற்பனைக்கு கொண்டு வருகிறார். 15 நாளில் இருந்து ஒரு மாதம் வரையில் அவர்களை (பல்லிகளை இப்படித்தான் விஜய் அழைக்கிறார்) தினமும் நன்றாக பராமரிக்க வேண்டும் என்கிறார். உடலில் குளர்ச்சியான தன்மையை மட்டுமே கொண்டுள்ள பல்லி குட்டிகளை பிறந்தது முதல் 30 நாட்கள் வரையில், இதமான வெயிலில் (காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணிக்கு பிறகு) சூடு காட்ட வேண்டும். உடலில் தண்ணீரை தெளித்து அந்த தண்ணீர் காயும் வரையில் வெயிலில் வைத்து பராமரிக்க வேண்டும் என்கிறார்.

பல்லிகள் என்றால் பூச்சிகளைதான் சாப்பிடும். ஆனால் இந்த வகை பல்லிகள் அசைவ பல்லிகள் அல்ல. இவை சுத்த சைவமாகும். கீரை, பூக்கள், பழங்களே இதன் உணவாகும்.

ஒரு மாதத்துக்கு பிறகே இந்த பல்லிகள் தானாக சாப்பிட தொடங்குகின்றன. அது வரையில், குழந்தைகளுக்கு உணவை ஊட்டுவது போன்றுதான் சிறிது சிறிதாக ஊட்ட வேண்டி இருக்கிறது. இதற்காக கீரை, பழங்கள், பூக்களை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும். பூக்களில் செம்பருத்தி பூவே பல்லிகளுக்கு பிடித்தமான உணவாக உள்ளது. பழங்களில் எல்லா பழங்களுமே பிடித்தவையாக உள்ளன.

வேளச்சேரி டான்சி நகர் முதல் தெருவில் தனது வீட்டில் வைத்து பல்லிகளை பராமரித்து வரும் விஜய் மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரம் மற்றும் அனுமதியுடன் இந்த வகை பல்லிகளை வளர்த்து வருகிறார்.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு விஜயிடம் இருந்துதான் அதிகாரிகள் பெரிய பல்லியை வாங்கி உள்ளனர். ஒடிசாவில் உள்ள நந்தஸ்கண்ணன் விலங்கியல் பூங்காவிலும் விஜய் வளர்த்த பல்லி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
தென் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரெட்டிகோனா’ வகையைச் சேர்ந்த இந்த வகை பல்லிகள் கரும் பச்சை, இளம் பச்சை, சிவப்பு, கரும் சிவப்பு, மஞ்சள், சிவப்பு கலந்த மஞ்சள் ஆகிய வண்ணங்களில் உள்ளன.

முட்டையிடும் 4 பெரிய பல்லிகளும் விஜயிடம் உள்ளன. இவை இடும் முட்டைகளைத்தான் பொறிக்க வைத்து பல்லி குட்டிகளை வளர்த்து வருகிறார்.

இதுபோன்ற முட்டைகளில் இருந்து வெளிவரும் பல்லி குட்டிகள் பெரும்பாலும் ஒற்றையாகவே இருக்கும். சில நேரங்களில் இரட்டை பல்லிக் குட்டிகள் பிறப்பது உண்டு. ஆனால் தற்போது விஜய் பொறிக்க வைத்த முட்டைகளில் 5 முட்டைகளில் இருந்து இரட்டை பல்லி குட்டிகள் பிறந்துள்ளன.

ஒரு முட்டையில் இருந்து 3 குட்டிகளும் வெளி வந்துள்ளன. இவற்றில் ஒன்று மட்டும் இறந்து விட்ட நிலையில், மற்ற இரண்டு குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன.

இதுபோன்று 5 முட்டைகளில் இருந்து இரட்டை பல்லி குட்டிகள் பிறப்பது என்பது மிகவும் அரிதானதாகும் என்று விஜய் பெருமைப்படுகிறார். பிறக்கும்போது வெறும்  அடியாகவே இருக்கும் பல்லி குட்டி 6 அடி பெரிய பல்லியாக வளர்வதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகும். பிறந்து 3 நாட்களே ஆன 35 குட்டிகளை விஜய் தற்போது பராமரித்து வருகிறார். 2 அல்லது 3 நாளில் 10 முட்டைகள் பொறிப்பதற்கு தயாராக உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பல்லிகளை வளர்ப்பு பிராணியாக வீடுகளில் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. அதுபோன்று சென்னையில் பல வீடுகளில் பல்லிகளை நாய், பூனை போன்று செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள்.

பல்லிகளை மிகுந்த மரியாதையோடு அவர்கள் என்றே விஜய் அழைக்கிறார். தூரத்தில் இருப்பதையும் இந்த பல்லிகளால் எளிதாக பார்க்க முடியும். உலக அளவில் 5 முட்டைகளில் இருந்து இரட்டை பல்லிகள் ஒரே நேரத்தில் பிறந்துள்ளது இதுவே முதல் முறையாகும் என்று கூறும் விஜய், இது பெரிய சாதனையாகும் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இளம் தலைமுறையினர் பலர் பல்லிகளை விரும்பி வளர்க்கிறார்கள். அதே நேரத்தில் சிறுவர்கள்-சிறுமிகள் மத்தியிலும் இந்த பல்லிகளை வளர்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனது மகன் ஆகாஷ் 2 ஆண்டுகளாக பெரிய பல்லியை பராமரித்து வருகிறான்.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதம் இங்கு பேட்டர் காலம். ஜூன் மாதம் முட்டையில் இருந்து பல்லி குட்டிகள் வெளியில் வர தொடங்கும். பல்லிகளுக்கு உடும்பு தோல் போன்று தடிமனான தோல் இருக்கும். பெண்கள் பலரும் விரும்பி வளர்க்கிறார்கள். பெற்றோர்களிடம் கூறி அடம் பிடித்து வாங்கி வீடுகளில் வளர்க்கும் குழந்தைகளும் உண்டு. சைவம் மட்டுமே சாப்பிடுவதால் இதனை வளர்ப்பது எளிதாகும்.

வாலால் அடிக்கும் தன்மை கொண்ட இந்த பல்லிகள் நம்மிடையே வளர்வதால் அது போன்ற செயலில் ஈடுபடுவது குறைவு.

5 ஆண்டுகளாக பல்லியை வளர்க்கும் எனது அனுபவத்தில் இதுவரை 5 முட்டையில் இருந்து இரட்டை பல்லிகள் பிறந்து இருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்திலும் நான் வளர்த்த பல்லி நடித்துள்ளது. அப்போது ரஜினிகாந்த் இதனை பார்த்து வியந்தார்.

காட்டில் வளரும் பெரிய பல்லிகள்தான் முரட்டுத்தனம் கொண்ட வையாக இருக்கும். மியூட்டேசன் முறையிலான இந்த வண்ணப் பல்லிகள் மிகவும் சாது வானவையாகும். யாரையும் தாக்காது.

யாராவது வீட்டுக்குள் வந்தால் புதியவர்கள் வந்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும். ஆனால் எந்த சத்தமும் எழுப்பாமல் அமைதியாகவே இருக்கும். இந்த பல்லிகளுக்கு தனியாக வீட்டில் இடம் ஒதுக்கி கொடுத்தால் அதில் போய் உட்கார்ந்து கொள்ளும்.

நாம் அருகில் சென்று கைகளிலோ, தோள்களிலோ தூக்கி வைத்துக் கொண்டாலும் மிகவும் சாந்தமாக அமர்ந்தே இருக்கும். இந்த பல்லிகளை வளர்ப்பதில் எனது மனைவி ராதிகா மிகுந்த உறுதுணையாக உள்ளார். 12 வயதில் இருந்தே எனக்கு விலங்குகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. மனைவியும் அதே எண்ணம் கொண்டவர்தான். 7 வயது மகன் ஆகாஷ், 5 வயது மகள் லயா ஆகியோரும் பல்லிகளோடு எளிதாக பழகி விட்டார்கள்.

பாம்பை போன்று தோல் உரிக்கும் தன்மை கொண்ட இந்த பல்லிகள், உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியாக தோலை உரிக்கும். இதுபோன்று செய்வதன் முலம் அதன் வண்ணம் கூடி கூடுதல் மெருகு ஏற்படும் என்று கூறும் விஜய். 5 முட்டைகளில் இருந்து ஒரே நேரத்தில் இரட்டை பல்லிகள் பிறந்து இருப்பது அதுவும் சென்னையில் அது நடந்து இருப்பது உண்மையிலயே பெருமை அளிக்கிறது.

இதனை சிறப்பான தருணமாகவே நான் உணர்கிறேன் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

என்ன...? பல்லிகளை வளர்க்கும் ஆசை உங்களுக்கும் ஏற்பட்டு விட்டதா? உடனே விஜயை தொடர்பு கொள்ளுங்கள். (அவரது செல்போன் எண் 90927 72233).

வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம் அருகில் ‘டேம்டு பெட்ஸ்’ என்ற பெயரில் விஜய் தனியாக கடை நடத்தி வருகிறார். அங்கு சென்று நீங்கள் வித விதமான பல்லிகளை பார்க்கலாம்... ரசிக்கலாம்... வாங்கலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad