சீரற்ற காலநிலை: 5 மாவட்டங்களில் 130,672 பேர் பாதிப்பு : 5,067 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு : மண்சரிவில் சிக்கிய சிறுமி சடலமாக மீட்பு : நீரில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயதுச் சிறுவனை காணவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

சீரற்ற காலநிலை: 5 மாவட்டங்களில் 130,672 பேர் பாதிப்பு : 5,067 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு : மண்சரிவில் சிக்கிய சிறுமி சடலமாக மீட்பு : நீரில் அடித்துச் செல்லப்பட்ட 14 வயதுச் சிறுவனை காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த 31,303 குடும்பங்களிலுள்ள 130,672 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு, 5,067 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதோடு, மற்றுமொருவரை காணவில்லை என நிலையம் அறிவித்துள்ளது.

5 வீடுகள் முழுமையாகவும் 317 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கிரியெல்ல பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் குறித்த சிறுமியின் தாய் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன மற்றைய நபர் தொடர்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாரவில, விலபார பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 வயது சிறுவன் காணாமல் போயுள்ளான்.

இன்று (04) காலை குறித்த சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஹெமில்டன் கால்வாய்க்கு அருகில் நின்றிருந்த நிலையில், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்தளாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து உடன் சென்ற நபரும் மற்றுமொருவரும் குறித்த சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்த போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன சிறுவனைத் தேடும் பணி பொலிஸாரின் உதவியுடன் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

தற்போது நிலவும் களனி, களு கங்கை, கின் கங்கை, அத்தனுகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்தி நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த ஆறுகளின் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 44,000 மின்சார பாவனையாளர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக, மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

குளியாபிட்டி, குருணாகல், ஹொரணை, மத்துகம, நாரம்மல, தம்புள்ளை, அகுரஸ்ஸை, கேகாலை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சீரற்ற வானிலையால், 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment