யாழ். மாவட்டத்தில் 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன : வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

யாழ். மாவட்டத்தில் 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன : வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

(சி.எல்.சிசில்)

யாழ். மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை வரை 49 ஆயிரத்து 280 கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் யாழ். மாவட்டத்துக்கு கிடைக்கப் பெற்றன. 

இவை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் வழிகாட்டலுக்கமைவாக கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையின் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டன.

இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட மே 30ஆம் திகதி 2 ஆயிரத்து 947 பேருக்கும் மே 31ஆம் திகதி 6 ஆயிரத்து 123 பேருக்கும் ஜூன் முதலாம் திகதி 13 ஆயிரத்து 822 பேருக்கும் ஜூன் 2ஆம் திகதி 23 ஆயிரத்து 454 பேருக்கும் ஜூன் 3ஆம் திகதியான நேற்று ஆயிரத்து 740 பேருக்கும் மொத்தமாக 48 ஆயிரத்து 86 பேருக்கு தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஆயிரத்து 194 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டன. எனவே நேற்று மாலை வரை மொத்தமாக 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிலவகை மருந்துகள் ஊசி மருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பழை, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் நாளை சனிக்கிழமை தடுப்பூசிகள் பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு வழங்குவதற்காக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

மேலும் அடுத்த கட்டமாக வழங்கப்படவிருக்கும் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகள் கிடைக்கப் பெறுமிடத்து ஏனைய கிராம அலுவலகர் பிரிவுகளிலும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad