இலங்கையின் கடன் சுமை 13 டிரில்லியனை எட்டியுள்ளதற்கான காரணம் என்ன : விளக்குகிறார் அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

இலங்கையின் கடன் சுமை 13 டிரில்லியனை எட்டியுள்ளதற்கான காரணம் என்ன : விளக்குகிறார் அமைச்சர் பந்துல

(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)

சுதந்திரத்துக்கு பின்னர் ஒவ்வொரு அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் மீண்டெழும் செலவினங்களும் மூலதனச் செலவீனங்களுக்கும் அதிகரித்து வந்தமையாலேயே நாட்டின் கடன் சுமை 13 டிரில்லியனை எட்டியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி முகாமைத்துவ பொறுப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சுதந்திரத்துக்கு பின்னர் பற்றாக்குறையான வரவு செலவுத் திட்டங்களே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் மீண்டெழும் செலவினங்களும் மூலதனச் செலவீனங்களும் அதிகரித்தே வந்துள்ளன. 

மீண்டெழும் செலவினங்கள் மற்றும் மூலதனச் செலவினங்கள் அதிகரிப்பதால் எந்தவொரு அரசின் காலப்பகுதியிலும் அரச செலவுகள் அதிகரிக்கும்.

வரி மற்றும் வரியில்லா வருமானங்கள் அரச செலவினங்களுக்கு நிகராக அதிகரிப்பதில்லை. அரச செலவினம் அதிகரிக்கும் போது நடைபெறும் செயற்பாடுதான், வரவு, செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்படுவதாகும். அதனால் ஒவ்வொரு வருடமும் பற்றாக்குறையான வரவு செலவுத் திட்டம் பற்றியே பாராளுமன்றத்தில் பேசுகின்றோம்.

அரசை எந்த அரசாங்கம் ஆட்சி செய்தாலும் வரவை விட செலவுதான் அதிகமாக உள்ளதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறுவதன் மூலம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள பார்க்கிறோம். அல்லது வெளிநாட்டு நிதி மூலாதாரங்களை அடிப்படையாக கொண்டுதான் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்ள பார்க்கிறோம்.

மேலும் 2015ஆம் ஆண்டில் 8.69 டிரில்லியன் கடன் நாம் செலுத்தியிருக்கவில்லை. 2016 இல் 9.4 டிரில்லியனும், 2017 இல் 10.3 டிரில்லியனும், 2018 இல் 12.8 டிரில்லியனும், 2019 இல் 13 டிரில்லியன் கடனும் நாம் செலுத்தவில்லை. 

2014ஆம் ஆண்டு நாம் அரசாங்கத்தை கையளிக்கும் போது 7 டிரில்லியன் கடன்தான் இருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இது 13 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. 5 வருடத்தில் இலங்கை வரலாற்றில் இந்தக் காலப்பகுதியில்தான் கடன் தொகை அதிகரித்திருந்தது. 

2004ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் நாட்டை பொறுப்பேற்ற போது 2 டிரில்லியன் கடன் இருந்தது. கையளிக்கும் போது அது 7 டிரில்லியனாக இருந்தது. யுத்தம், உலக நிதி நெருக்கடி, உலக உணவு நெருக்கடி, நாட்டை அபிவிருத்தி செய்யும் சவால் என பல சவால்கள் மஹிந்த ராஜபக்ஷ்வின் காலத்தில் இருந்தன. அதனால் 10 வருடங்களில் 5 டிரில்லியன்தான் கடன் அதிகரித்திருந்தது.

ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு ஆண்டு காலப்பகுதியில் 6 டிரில்லியன் கடன் அதிகரித்துள்ளது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் எவ்வித நெருக்கடிகளும் இருக்கவில்லை. அபிவிருத்திகள் எதனையும் செய்யாது கடன் தொகையை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment