மத்திய வங்கி பிணை மோசடிகள் : ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலையில் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 24, 2021

மத்திய வங்கி பிணை மோசடிகள் : ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஜூலையில்

(எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை விவகாரத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நேற்று (23.06.2021) தீர்மானித்தது.

மத்திய வங்கியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி நடாத்தப்பட்ட மூன்றாவது பிணை முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி ஊடாக 15 பில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கொவிட் 19 பரவல் நிலைமை காரணமாக, நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்ட சுற்று நிருபத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த வழக்கு பிற்போடப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று அதனை மீள விசாரணைக்கு எடுப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றமே இதனை அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனம், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தலைமையில் நாமல் பண்டார பலல்லே மற்றும் ஆதித்ய பட்டபெத்தி ஆகிய நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு வழக்கில் 3 ஆம் பிரதிவாதி அர்ஜுன மகேந்ரன் மற்றும் 9 ஆம் பிரதிவாதி அஜான் புஞ்சி ஹேவா ஆகியோர் மன்றை புறக்கனித்து வரும் நிலையில், அவர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அத்துடன் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனமும் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதிகள் தலா ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதிவாதிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களது கடவுச் சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இக்குற்றம் இடம்பெற்றதாக கூறப்படும் காலப்பகுதியில் நிதி அமைச்சராக செயற்பட்ட சந்தேஷ் ரவீந்ர கருணாநாயக்க எனும் ரவி கருணாநாயக்க, பேபசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் அர்ஜுன் ஜோஸப் அலோசியஸ், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி பலிசேன அப்புஹாமிலாகே கசுன் ஓஷத பலிசேன, பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜெப்ரி ஜோஸப் அலோசியஸ், சித்ர ரஞ்சன் ஹுலுகல்ல, முத்து ராஜா சுரேந்ரன், ஊழியர் சேம இலாப நிதியத்தின் அப்போதைய பிரதானி பதுகொட ஹேவா இந்திக சமன் குமார ஆகிய 7 பிரதிவாதிகளே இவ்விவகாரத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.

இந்நிலையிலேயே இவ்வழக்கு எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

No comments:

Post a Comment