தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக வழக்கு : 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறை என மீண்டும் எச்சரிக்கிறார் அஜித் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக வழக்கு : 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறை என மீண்டும் எச்சரிக்கிறார் அஜித்

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களில் குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனையை வழங்குவதற்கு அல்லது இந்த இரு தண்டனைகளையும் வழங்குவதற்கு அனுமதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது, தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 41, 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் , குற்றம் உறுதிச் செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் மற்றும் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்குவதற்கு அனுமதி உள்ளதுடன் இந்த இரு தண்டனைகளையும் சந்தேக நபர்களுக்கு வழங்கவும் முடியும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment