கிழக்கில் இணைந்து போட்டியிட SLMC - TNA பேச்சுவார்த்தை : முதல் சுற்று நிறைவு, இறுதி முடிவு இன்னுமில்லை - News View

Breaking

Post Top Ad

Monday, May 3, 2021

கிழக்கில் இணைந்து போட்டியிட SLMC - TNA பேச்சுவார்த்தை : முதல் சுற்று நிறைவு, இறுதி முடிவு இன்னுமில்லை

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்தன. 

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற மக்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் பேசுகின்ற மக்களாக நாங்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாணமும் தமிழ் பேசுகின்ற மாகாணம் என்ற ரீதியில், அதன் அடையாளத்தை பேணும் வகையில், நாங்கள் ஆட்சியைக் கைப்பாற்றுவோம் என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இது தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதனை தமது கட்சி பரிசீலிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ் பேசும் மக்கள் கைப்பற்ற வேண்டிய தேவை இருப்பதனால், தமிழ் முஸ்லிம் சக்திகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தையே இடம்பெற்றதாகவும் அதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad