இயலாமையை உணர்ந்து நாட்டை பாதுகாப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் : ஹெக்டர் அப்புஹாமி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

இயலாமையை உணர்ந்து நாட்டை பாதுகாப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் : ஹெக்டர் அப்புஹாமி

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலில் தோல்வியடைந்திருந்தால் இயலாமையை உணர்ந்து நாட்டை பாதுகாப்பாக நிர்வகிக்கக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதனையே நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றின் முதலாம் இரண்டாம் அலை ஏற்பட்டபோது விமான நிலையங்களை மூடுமாறும், மக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களையும் வழங்குமாறும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியபோது, சுகாதார அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் அவரை விமர்சித்தனர். இறுதியில் நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நிலைமை இவ்வாறு தீவிரமடைந்த போதிலும், மண்குடத்தை ஆற்றிலிட்டு உடைத்து, தம்மிக பாணத்தை பிரசித்தப்படுத்தி மக்களை மூடநம்பிக்கைகளால் ஏமாற்ற முற்பட்டனர். ஆனால் தற்போது தம்மிக பாணம் கொவிட் தொற்றினை குணப்படுத்தாது என்பது மருத்துவ ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதனை பிரச்சித்தப்படுத்தியவர்கள், மக்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கியவர்கள் தொடர்பில் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். கொவிட் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க பலர் நியமிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை. 

தற்போது வெளியிடப்படுகின்ற கொவிட் தொற்றாளர்கள், மரணங்களின் எண்ணிக்கை நம்பிக்கைக்கு உரியதல்ல. இனங்காணப்படும் தொற்றாளர்களை விட இரு மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், இதனைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் இதுவரையில் முறையான திட்டமிடல் இல்லை. 

இவ்வாறான நிலையில் இந்தியாவிலிருந்து தப்பி வந்த பலரும் மன்னார் உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ளனர். இவர்கள் எவ்வாறு நாட்டுக்குள் நுழைந்தனர்? இது தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு கொவிட் தொற்றால் பதிவாகும் ஒவ்வொரு மரணத்திற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். கொவிட் தொடர்பில் பிழையான தீர்வுகளை எடுத்த சகலரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment