தமக்கு தடுப்பூசி கிடைக்காது என எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ - News View

Breaking

Post Top Ad

Thursday, May 27, 2021

தமக்கு தடுப்பூசி கிடைக்காது என எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் - நாமல் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் செயற்திட்டம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் முன்னெடுத்து செல்லப்படும் எனவே தமக்கு தடுப்பூசி கிடைக்காது என எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டாம் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு தொடர்பான குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமக்கான சந்தர்ப்பம் வரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். இல்லையாயின் வைத்தியர்களால் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போகும்.

கொவிட் குழு மற்றும் வைத்தியர்கள் இணைந்து தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர். 

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக 5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. கண்டி மாவட்டத்தில் இந்த வார இறுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

எனவே தடுப்பூசி யாருக்கு எங்கே என்பதை தீர்மானிப்பவர்கள் வைத்தியர்கள் என்றும் நாம் அதற்கு தேவையான பின்னணியை உருவாக்குதல் மற்றும் அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகும். இந்த நடவடிக்கை தனது அமைச்சுக்குரியது அல்ல என்றாலும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கவே கண்டிக்கு வருகை தந்ததாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad