முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மியன்மார் ராணுவம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 9, 2021

முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மியன்மார் ராணுவம்

மியன்மாரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.

மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது செய்து சிறை வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியன்மார் ராணுவம்.

ஆனால் மியன்மார் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியன்மார் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 700 க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 

ஆனாலும் மியன்மாரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது.

இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ள அதேவேளையில் துணை அதிபர் மான் வின் கைங் தான் மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் பலர் ராணுவத்திடம் இருந்து தப்பி தலைமறைவாகினர்.

அதனை தொடர்ந்து ராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியன்மார் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவை தொடங்கினர். 

இந்தக் குழுவின் தலைவராக (பொறுப்பு) மான் வின் கைங் தான் உள்ளார். மியன்மாரின் நிழல் அரசாக செயல்பட்டு வரும் இந்த சி.ஆர்.பி.எச்., நாட்டின் மக்களாட்சி அரசாக செயல்பட சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறது.

ஆனால் மியன்மார் ராணுவம் சி.ஆர்.பி.எச்சை சட்ட விரோத குழுவாக கருதுகிறது. அந்த குழுவுடன் ஒத்துழைக்கும் எவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என ராணுவம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் சி.ஆர்.பி.எச்சை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள மியன்மார் ராணுவம், முந்தைய அரசை சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமன்றி மியன்மாரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்சால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படையும் பயங்கரவாத இயக்கமாக மியன்மார் ராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை இன குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த மக்கள் பாதுகாப்பு படை மத்திய ஒற்றுமை ராணுவத்தின் முன்னோடியாக செயல்படும் என சி.ஆர்.பி.எச். கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment