ஆன்மீக சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஐயா - News View

About Us

About Us

Breaking

Thursday, May 27, 2021

ஆன்மீக சேவைக்கு தன்னை அர்ப்பணித்தவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஐயா

ஈழத்தில் சைவத்தை மட்டுமல்லாது தமிழையும் எமது கலாச்சாரத்தையும் பேணி வளர்த்த பெருமைக்குரிய மாமனிதராக போற்றப்பட வேண்டியவர். சைவத் தமிழ் வரலாற்றிலே தனி மனிதனாக இத்தனை காலமும் எவ்வித எதிர்பார்ப்புக்களோ, சுயவிருப்பு வெறுப்புகள் அன்றி எம்மண்ணின் கலை, கலாச்சாரத்துடன் பிண்ணிய வாழ்க்கை வாழ்ந்து அகவை அறுபதை காணும் மணிவிழா நாயகன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஐயா அவர்கள் புகழையும் சேவை சுருக்கத்தையும் ஓரிரு வரிகளில் அடக்கி விட முடியாது.

சைவத்தமிழர்கள் வாழ்வு அவர்கள் தம் கலாச்சாரம் என்பவற்றை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று அயராது சேவையாற்றும் பண்புமிகு பெருந்தகையாளன் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஐயா.

ஐயாவின் தலைமையிலும் பல்வேறு ஆலயங்கள், தொண்டு நிறுவனங்கள், சேவை மையங்கள், யாத்திரியர் மடம் என பல அமைந்துள்ளது.

அவரது நேர்த்தியான நெறியாள்கையில் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, சிவபூமி வாழ்வாதார நிதியம், சிவபூமி மருத்துவ நிதியம், சிவபூமி கல்வி நிதியம், சிவபூமி தொழிற்பயிற்சிப் பாடசாலை, சுழிபுரத்தில் சிவபூமி முதியோர் இல்லம், கீரிமலையில் சிவபூமி மடம், சிவபூமி யாத்திரிகர் விடுதி, சிவபூமி கலைக்களஞ்சியம், திருகோணமலையில் சிவபூமி மடம், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, குப்பிளானில் சிவபூமி ஞான ஆச்சிரமம், கிளிநொச்சியில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, இயக்கச்சியில் சிவபூமி கோட்டம், சிவபூமி அன்னபூரணி வயல், நாவற்குழியில் சிவபூமி திருவாசக அரண்மனை, சிவபூமி அரும்பொருட் காட்சியகம், சிவபூமி திருமூலர் மூலிகைத் தோட்டம், வாயில்லா ஜீவன்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்ள சிவபூமி நாய்கள் சரணாலயம் ,மயிலிட்டியில் சிவபூமி கந்தபுராண ஆச்சிரமம் அமைத்து தொண்டாற்றியதோடு மட்டும் நின்று விடாமல் இன்று கிழக்கிலங்கை நோக்கியும் தனது தொண்டை ஆற்ற ஆலோசித்துள்ள மகான்.

அன்பான ஆசிரியராய், தலைமைத்துவம் நிறைந்த அதிபராய், உன்னத பேச்சாளனாய், ஆலயங்கள் சமுதாய வாழ்வின் மையங்கள் என்பதை உலகுக்கு உணர்த்தி நிற்கும் உன்னதமானதோர் ஆலய அறங்காவலனாய், அப்பழுக்கற்ற சமூக சேவகனாய், சைவத்தமிழ் மக்களின் தொலைந்து போன அடையாளங்களை ஆவணப்படுத்தும் பற்றாளனாய், சைவத் தமிழர்கள் நாம் எல்லோரும் தலை நிமிர்ந்து வாழத் தனி ஒரு ஆளுமையாய் நாளும் பொழுதும் பணியே மூச்சாகி அகவை அறுபதில் கால் பதிக்கும் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் என்ற வகையில் தமிழர்களின் பிரதிநிதி என்ற வகையிலும் தங்களை மணி விழா நாளில் வாழ்த்துகிறேன் ஐயா. தங்கள் சேவையில் என்னுடைய ஒத்துழைப்பும் என்றும் இருக்கும்.

அங்கஜன் இராமநாதன் - (பா.உ)
பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர்,
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்

No comments:

Post a Comment