நாடு மிக மோசமான நிலையில், முறையான தீர்மானம் அவசியம், மக்கள் அவதானத்துடன் செயற்படவும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, May 10, 2021

நாடு மிக மோசமான நிலையில், முறையான தீர்மானம் அவசியம், மக்கள் அவதானத்துடன் செயற்படவும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

நாடு மிக மோசமான நிலையிலுள்ளதாகவும் இத்தீர்க்கமான தருணத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வது அவசியமெனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

நாட்டு மக்கள் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள அச்சங்கம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயற்பாடுகளையும் அதற்கான உணவுகளை உட்கொள்ளுமாறும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாடு எதிர்கொள்ள நேர்ந்துள்ள மோசமான நிலை தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவர் சங்கம், விசேட மருத்துவர்களின் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எழுத்து மூலமான கடிதமொன்றை கையளித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுச் செயலாளர் டாகடர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேற்படி கடிதத்தில் நாட்டில் பயணத் தடைகளை விதிப்பதற்கான அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாட்டங்களை மட்டுப்படுத்துவது தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது உபயோகத்திலுள்ள அனைத்து தடுப்பூசிகளும் உயர்ந்த மட்டத்திலானவை.

முடிந்தளவு சுகாதார பணியாளர்களை சேவைக்கமர்த்தி நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களுக்கு தடுப்பூசியை வழங்க நடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்.

தற்போது நாட்டில் பரவும் வைரஸ் மிக வேகமாக பரவும் வகையானது என்பதால் முகக் கவசத்தை முறையாக அணிந்து கொள்ளுதல் முக்கியமாகும்.

ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதன் பின்னர் ஐந்து நாட்கள் கடந்தே நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. அந்த தினங்களுக்குள் குறித்த வைரஸ் தொற்று ஏனையவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன. 

அச்சமயத்தில் மருத்துவர்களினால் சிகிச்சை வழங்குவது அசௌகரியமாகலாம். அதன்போது ஒட்சிசன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் தேவை அதிகமாகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் நிலைமை தொடர்பில் உணர்ந்து செயற்படல் அவசியமாகும்.

இது கொரோனா வைரஸ் முதலாவது அலை போன்றதல்ல என்பதால் அலட்சியமாக செயற்பட வேண்டாம், பொதுமக்கள் சுகாதாரத்துறை வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment