வடக்கில் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது ! இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரும் காட்டில் பதுங்கியிருந்த நிலையில் மடக்கிப் பிடிப்பு - News View

Breaking

Post Top Ad

Saturday, May 1, 2021

வடக்கில் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது ! இரு பெண்கள் உள்ளிட்ட ஐவரும் காட்டில் பதுங்கியிருந்த நிலையில் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடப்பெற்ற 15 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய கொள்ளையர்கள் 5 பேரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளதுடன் கொள்ளையிட்ட 50 பவுண் நகை உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.

இந்த கொள்ளையர்கள் கைது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ. அமரசிங்க கருத்து தெரிவிக்கையில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8 கொள்ளை சம்பவங்கள், கிளிநொச்சியில் 03 கொள்ளை சம்பவங்கள், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 2 கொள்ளைச் சம்பவங்கள், முல்லைத்தீவில் 2 கொள்ளைச்ச சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று ஆண்கள் உள்ளிட்ட ஜந்து சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த கொள்ளைச் சம்பவங்கள் ஒரு குழுவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் கொள்ளையடித்த நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதுடன் நகை கடைகளில் அவர்களின் உறவினர்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 3 ஆண்களும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் அவர்கள் கொள்ளையிடும் நகைகளை குறித்த இரு பெண்களும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்துள்ளதோடு கிளிநொச்சி மக்கள் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடகு வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

கொள்ளைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவருகிறது.

வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியை சேர்ந்த பிரதான சூத்திரதாரி சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இவருடைய மனைவி இவருடைய மருமகன் மற்றும் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வசிக்கும் இவருடைய அக்கா மற்றும் அவருடைய மகன் ஆகியோரே இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

நீண்ட காலமாக இவர்களை தேடிவந்த புதுக்குடியிருப்பு பொலிசார், அண்மையில் கோம்பாவில் பகுதியில் வீடு உடைத்த கொள்ளைச் சம்பவத்தின்போது, குறித்த பகுதியில் உள்ள கடை ஒன்றின் சி.சி.ரிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமரசிங்கவின் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இவர்கள் வீடுகளில் இருக்காது தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையில் ஆனந்தபுரம் பகுதி காடு ஒன்றிற்குள் மறைந்திருந்த நிலையில் நேற்றிரவு (30) சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட கையடக்க தொலைபேசிகள், விற்பனை செய்யப்பட்ட நகைகள், மற்றும் வீடுகளில் உண்டியலில் உடைக்கப்பட்ட பணம், உள்ளிட்ட பெருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

15 கொள்ளைச் சம்வத்தின் போது 150 பவுண் வரை கொள்ளையடித்துள்ளார்கள் எனவும், உச்சபட்சமாக புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 19 பவுண் நகைகள் இவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

தற்போது 50 பவுண் வரையில் இவர்களின் தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(புதுக்குடியிருப்பு விசேட நிருபர், மாங்குளம் நிருபர் - சண்முகம் தவசீலன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad